Dhanush: தனுஷ் தொடர்ந்த வழக்கு! - நடிகை நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் பற்றிய 'Nayanthara: Beyond the Fairytale' என்ற ஆவணப்படம் வெளியானது. இதில் தனுஷின் 'wunderbar films' தயாரிப்பு நிறுவனத்தின் விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடித்திருக்கும் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காட்சிகளைப் பயன்படுத்த தனுஷிடன் 'NOC' கேட்டும், அவர் தரவில்லை என்றும் 3 நொடிகள் கொண்ட காட்சியைப் பயன்படுத்தியதற்கு தனுஷ் தரப்பில் ரூ.10கோடி கேட்டது அநியாயமானது என்றும் நயன்தாரா ஆதங்கத்துடன் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தச் சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய தனுஷ் தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...