Phil Hughes : 'உயிரைப் பறித்த அந்த ஒரு பவுன்சர்!' - `63 Not Out' பிலிப் ஹூயூஸ் நினைவுகள்!
ஒரு கிரிக்கெட் மட்டையால், ஒரு கிரிக்கெட் பந்தால் எதையெல்லாம் சாத்தியப்படுத்த முடியும்? நடராஜன் மாதிரியான வீரருக்கு ஒரு பந்தால் ஒரு புது வாழ்க்கையையே உருவாக்கிக் கொடுக்க முடியும். வெறும் கனவுகளை மட்டுமே சுமந்து திரிந்த ரிஷப் பன்ட்டுக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாயை ஒரு மட்டையால் வாங்கிக் கொடுக்க முடியும். ஆனால், இதே பந்தும் கிரிக்கெட் மட்டையும் ஒரு வீரனின் வாழ்க்கையையே முடித்து வைத்த சம்பவமும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. ஆம், ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹூயூஸ் ஒரு பவுன்சர் பந்து தாக்கியதில் உயிரிழந்து இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது.
ஆஸ்திரேலிய கோடைக் காலத்தின் ஆரம்பத்தில் சிட்னி மைதானத்தில் ஒரு உள்ளூர் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சவுத் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான போட்டி அது. சவுத் ஆஸ்திரேலியா அணிக்காக பிலிப் ஹூயூஸ் ஆடி வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு 25 வயது. இன்னும் ஐந்தே நாட்களில் 26 வது வயதை எட்டவிருந்தார். ஆஸ்திரேலியாவின் மாக்ஸ்வில் பகுதியில் பிறந்த பிலிப் ஹூயூஸ்க்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீதுதான் தீராக் காதல். பண்ணையுடன் கூடிய தங்கள் வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் ஆடி தீர்ப்பதுதான் பிலிப் ஹூயூஸின் பொழுதுபோக்கு. பள்ளி அளவிலான போட்டிகள், குறிப்பிட்ட வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் என எல்லாவற்றிலும் தனி முத்திரை பதித்த பிலிப் ஹூயூஸ் 20 வயதிலேயே ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகியிருந்தார்.
2009 இல் தென்னாப்பிரிக்காவில் டர்பனில் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியை பிலிப் ஹீயூஸ் ஆடுகிறார். வலுவான தென்னாப்பிரிக்க அட்டாக்கை முறியடித்து 99 ரன்னில் இருக்கும் போது சிக்சரோடு சதத்தை நிறைவு செய்கிறார். அத்தோடு நிற்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலும் சதத்தை அடிக்கிறார். இதன்மூலம் ஒரு டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த இளம் வீரர் எனும் பெருமையை பிலிப் ஹூயூஸ் பெறுகிறார். ஆனாலும் அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. அணியில் நிறைய பெரிய தலைகள் இருந்ததால் அவ்வபோதுதான் அவருக்கு அணியில் இடம் கிடைக்கிறது. இருந்தும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர், 'பிலிப் ஒரு டான்சரைப் போல பாக்ஸரைப் போல கால்களை நகர்த்தும் திறமைப் படைத்தவர். பந்துக்கு ஏற்றவாறு லாவகமாக கால்களை நகர்த்தி ஆடும் வலுவான ஷாட்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.' என்கிறார். திறமையிருந்தும் அணிக்குள் தனக்கான இடத்துக்காக அவர் போராடிக் கொண்டுதான் இருந்தார். அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான் சிட்னியில் நவம்பர் கடைசி வாரத்தில் நடந்த அந்த நியூ சவுத் வேல்ஸ் Vs சவுத் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி. இந்தப் போட்டி நடந்த சமயத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவில்தான் இருந்தது. பார்டர் கவாஸ்கர் தொடர் அதிலிருந்து சில நாட்களில் தொடங்கவிருந்தது. அந்தத் தொடரை மனதில் வைத்துதான் பிலிப் ஹூயூஸ் நம்பிக்கையோடு ஆடி வந்தார்.
குறிப்பிட்ட அந்தப் போட்டியை ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழுவும் உன்னிப்பாக கவனித்து வந்தது. அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிலிப் ஹூயூஸ் அரைசதத்தை கடந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். மார்க் வாஹ் உட்பட தேர்வுக்குழுவை சேர்ந்தவர்கள் பிலிப் ஹியூஸை அணியில் மீண்டும் எடுக்கலாமே என பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான் அப்படியொரு அசம்பாவிதமும் நிகழ்ந்தது. 48 வது ஓவரை சீன் அப்பாட் வீசுகிறார். அந்த ஓவரின் மூன்றாவது பந்து கிட்டதட்ட 135 கி.மீ வேகத்தில் ஷார்ட்டாக வருகிறது. அந்தப் பந்தை பிலிப் மடக்கி அடிக்க முயற்சிக்கிறார். பந்தை தன்னை நெருங்குவதற்கு முன்பே தவறாக கணித்து பிலிப் பேட்டை சுழற்றியதால் பந்து பேட்டில் படாமல் அவரின் பின் கழுத்தில் வேகமாக மோதுகிறது. பிலிப் ஹூயூஸ் கொஞ்சம் தடுமாறுகிறார். பெரிய அபாயம் உண்டானதாக தெரியவில்லை. ஆனால், அடுத்த ஒன்றிரண்டு நொடிகளிலேயே பிலிப் ஹூயூஸ் சுருண்டு விழுகிறார்.
அப்போதுதான் நிலைமையின் தீவிரம் அத்தனை பேருக்கும் உரைக்கிறது. இரண்டு அணியின் வீரர்களும் ஓடி வந்து பிலிப்பை தேற்றும் முனைப்பில் சூழ்கிறார்கள். ஆனால், நிலைமை கையை மீறி செல்கிறது. பிலிப் ஹூயூஸ் அருகிலுள்ள மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்த போதும் பிலிப் ஹூயூஸை காப்பாற்ற முடியவில்லை. அவர் மூளைச்சாவு அடைகிறார். சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 27 ஆம் தேதி பிலிப் ஹூயூஸ் மறைந்தார் எனும் செய்தியை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் க்ளார்க் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே சோகத்தில் ஆழ்ந்தது.
பிலிப் ஹீயூஸின் இழப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் உடைந்து போயினர். பிலிப் ஹீயூஸின் இறப்புச் செய்தியை முழுமையாக வாசிக்க முடியாமல் விக்கித்து க்ளார்க்கே அந்த பத்திரிகையாளர் அறையிலிருந்து பாதியில் வெளியேறியிருந்தார். பிலிப் ஹூயூஸ் இறந்த பிறகான இரண்டு மாதங்கள் என் வாழ்க்கையின் மிக அழுத்தமான இரண்டு மாதங்கள் என்கிறார் மேக்ஸ்வெல். பிலிப் ஹூயூஸின் இறப்பு கொடுத்த மன அழுத்தத்தில் தன்னுடைய ஃபார்மே பாதிக்கப்பட்டதென்றும் தன்னுடைய சுயசரிதையில் மேக்ஸ்வெல் பகிர்ந்திருந்தார். ஆஸ்திரேலியர்களுக்கே இயல்பில் உரிய ஒருவித திமிர்த்தனம் இல்லாத ஆளாக பிலிப் ஹூயூஸ் அறியப்பட்டிருக்கிறார். தன்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதுமே சௌகரியமாக உணர வைக்க வேண்டும் என்கிற மனோபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். அதனால்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அத்தனை பேருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார்.
பிலிப் ஹூயூஸூக்கு அந்த கடைசிப் பந்தை வீசிய சீன் அப்பாட், 'நானும் அவரும் ஒன்றாகத்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அறிமுகமானோம். அவரின் திறமை என்னவென்று எனக்கு தெரியும். அவரின் விக்கெட்டை எடுக்க நான் கடினமாக உழைக்க வேண்டும் என எனக்கு தெரியும். அவரின் விக்கெட்டை நான் எடுத்ததே இல்லை. எப்போதும் அவரின் விக்கெட்டை எடுத்திருக்கவும் மாட்டேன் என நினைக்கிறேன்.' என கூறியிருப்பார்.
எப்போதுமே ஒரு இழப்பிலிருந்துதான் ஒரு சமூகத்துக்கான விழிப்புணர்வு கடத்தப்படுகிறது. பிலிப் ஹூயூஸின் இறப்பு களத்தில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை வீரியமாக்கியது. ஹெல்மட்டின் வடிவமைப்புகள் தொடங்கி விதிமுறைகள் வரைக்கும் பாதுகாப்பை மனதில் வைத்து நிறைய மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது.
'408' என்பதுதான் பிலிப் ஹூயூஸின் 'Baggy Green' தொப்பி நம்பர். அந்த எண்ணை ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டுமல்ல, கிரிக்கெட் உலகமே என்றைக்கும் மறக்காது. ஏனெனில் அது நிறைவேறாத பெரும் கிரிக்கெட் கனவுகளை உள்ளடக்கிய ஒருவித ஏக்கத்தின் எண்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...