செய்திகள் :

பாலய்யா வஸ்தாவய்யா - 13: `ஸ்ரீதேவியை அம்மா ஸ்தானத்தில் பார்க்கிறேன்' - பாலய்யா சொன்ன பகீர் காரணம்

post image
"ஆகு சாட்டு பிண்டே தடிசே... கொம்ம சாட்டு பூவு தடிசே..."

என்ற தெலுங்கு பாட்டைக் கேட்டிருக்கீங்களா..?

`என்னது இப்படி ஒரு பாடலா?' என கேட்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான்! இப்பாடலைக் கேட்பதைவிட பார்ப்பது கண்ணுக்குக் குளிர்ச்சி என்று சொல்வார்கள் சிலர். எஸ்.பி.பி-பி.சுசீலா பாடிய இப்பாடல் இடம்பெற்றது 1973-ல் ரிலீஸான 'வேட்டகாடு' (வேட்டைக்காரன்) படத்தில்.

இந்த டூயட் பாடலுக்கு மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்டது என்.டி.ராமாராவும் ஸ்ரீதேவியும் தான்!

என்.டி.ராமாராவும் ஸ்ரீதேவியும்

படம் சூப்பர் ஹிட்டானதைவிட இந்த மழைப்பாட்டு பட்டிதொட்டியெங்கும் `வைப்'பாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்போ ஓடிப்போய் யூ-டியூபில் பார்த்துவிட்டு வந்து மீதியை வாசியுங்கள்!

தலை நிறைய விக்கோடும், தரையைப் பரசும் பெல்பாட்டத்தோடும் தன் ஜெல்லி பெல்லி குலுங்க என்.டி.ஆர் ஆடியதைக் கண்டு அந்நாளில் சில்லரைகளை சிதறவிட்டனர் மனவாடுகள். அவ்வளவு ஏன்...இப்போதும்கூட,

"பார்த்தீங்களா பிரதர்லு மன தேவுடுகாரு மன்ச்சி சூப்பரு டான்ஸு!" என வாட்ஸ் அப்பில் ஃபார்வர்டு மெட்டீரியலாக்கி ஷேர் செய்து பயமுறுத்துகிறார்கள். இந்தப் பாடலைத் தான் இயக்குநர் ஷங்கர் -ரஜினி கூட்டணியில் வந்த 'சிவாஜி தி பாஸ்' படத்தின் தெலுங்கு வெர்ஷனில் முதலிரவில் ரஜினி-ஸ்ரேயா கற்பனையில் என்.டி.ஆர்-ஶ்ரீதேவி கெட்டப்பில் நினைத்துப்பார்த்து ஆடுவதைப்போல படமாக்கியிருந்தார்கள்.

விஷயம் அதுவல்ல... இந்தப் பாடல் ஒருவருக்கு மட்டும் பிடிக்காது. ஆம். அது நம் பாலய்யாவே தான். அதற்கான காரணத்தை அவரே ஒரு மேடையில் ஜாலியாக சொல்லியும் இருக்கிறார். அதைப் பின்னால் சொல்கிறேன்.

70களில் ஆரம்பித்து 80களின் இறுதிவரை தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கியவர் ஶ்ரீதேவி. எல்லோரும் நினைப்பதுபோல் அவர் பாலிவுட்டில் மட்டும் குயினாக இல்லை. தன் ஒட்டுமொத்த சினிமா கரியரில் மொத்தம் 269 படங்களில் நடித்திருக்கிறார் ஶ்ரீதேவி. அதில் 93 அக்மார்க் தெலுங்கு படங்கள். அப்பேர்ப்பட்ட நடிகை தன் தந்தைக்கு மிகப்பொருத்தமான ஜோடியாக சேர்ந்து நடித்த 12 படங்களிலும் திகழ்ந்தது தான் பாலய்யாவின் மனவருத்ததுக்குக் காரணம். உடனே அதற்காக பாலய்யாவின் கேரக்டரை தப்பாக நினைக்க வேண்டாம். அதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

என்.டி.ஆருடன் ஶ்ரீதேவி

அந்த சமயத்தில் தன் தந்தை என்.டி.ஆருக்கு சகோதரனாக, படத்தின் இரண்டாவது ஹீரோவாக சேர்ந்து நடித்த பாலய்யா, தனக்குப் போட்டியாக திகழ்ந்த சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் நாகார்ஜுனா போன்ற இளம் முன்னணி ஹீரோக்களிடம் ஒரு விஷயத்தில் தோற்றுப்போனார். அது என்னவென்றால் ஶ்ரீதேவிக்கு ஜோடியாக போட்டியாளர்கள் மூவரும் நடித்து ஹிட்ஸ் மேல் ஹிட்ஸ் கொடுக்க பாலய்யா அந்த ரேஸில் கடைசிவரையில் கலந்து கொள்ளாமல் பின் தங்கினார்! தந்தையோடு பாலய்யா நடித்த இரண்டு படங்களில் என்.டி.ஆருக்குத்தான் ஶ்ரீதேவி ஜோடியாக நடித்தார்.

``ஒரே படத்தில் இரண்டு ஸ்டார்கள் இருக்கக்கூடாது அல்லவா... அதனால் தான் என் படத்தில் ஶ்ரீதேவியை நான் ஜோடியாக நடிக்க எப்போதும் அழைத்ததில்லை!'' என்று அந்தக் கால ஆந்திர வார இதழ்களில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் விழாத குறையாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் பாலய்யா. ஆனால், விஷயம் அதுவல்ல... தன்னுடையை கரியரின் அந்திமக் காலத்தில் விக்கோடும், எக்ஸ்ட்ரா லக்கேஜோடும் தோற்றத்தில் வயதேறிய நிலையில் காணப்பட்ட என்.டி.ஆர், தன்னுடைய வயதை மறைக்க வேண்டி இளம் ஹீரோயின்களோடு நெருக்கமாக நடித்துக் கொண்டிருந்தார். (சரியாக அதே நேரத்தில் நம் புரட்சித் தலைவரும் இதே ஃபார்முலாவைத்தான் ஃபாலோ பண்ணினார்)

என்.டி.ஆருடன் ஶ்ரீதேவி

முதன்முதலில் ஶ்ரீதேவியோடு ஜோடி சேர்ந்தபோது என்.டி.ஆருக்கு அதிக வயதில்லை... ஜஸ்ட் 56 தான்! ஶ்ரீதேவிக்குத்தான் பாவம் வயது மூப்பாகி 16 வயது ஆகிவிட்டது! ஶ்ரீதேவிக்கு நல்ல சம்பளமும் கொடுத்து பெரிய மார்க்கெட்டையும் தெலுங்கில் உருவாக்கிக் கொடுத்ததே 'தேவுடு' என்டி.ஆர் காரு தான்! `இதெல்லாம் பாவம் மக்கா!' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் தெளிவாக கேட்கிறது. ஆனால், அநாட்களில் என்.டி.ஆர் ஃபேன்ஸ் தான் களிப்பேறு வகை கொண்டிருந்தார்கள். தியேட்டர்களில் `ஆகு சாட்டு பிண்டே தடிசே...' பாட்டு வரும்போது ஸ்கிரீனைத் தொடப் பாய்ந்து ஸ்க்ரீன் கிழிந்ததெல்லாம் ஆந்திர சினிமாவின் அந்தகாரப் பக்கங்கள்!

இத்தனைக்கும் ட்விஸ்ட்டாய் ஶ்ரீதேவியே பாலய்யாவுக்கு ஜோடியாக நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால், தன் தந்தைக்கு ஜோடியாக நடித்த நடிகைகளோடு நடிப்பதில்லை என பாலய்யாவே தவிர்த்தார்.

ஶ்ரீதேவியின் முயற்சி கடைசிவரை பாலய்யாவிடம் பலிக்கவில்லை. இதில் தந்தைக்கே ஶ்ரீதேவியோடு தன் மகன் ஜோடியாக நடிக்கும் சூழல் பிடிக்கவில்லை என்ற உப தகவலும் உண்டு.

எது எப்படியோ, அண்மையில் ஒரு மேடையில், 'ஏன் நீங்கள் ஶ்ரீதேவியோடு சேர்ந்து நடிக்கவே இல்லை..?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. முதன்முறையாக வெளிப்படையாகவே ஒரு பதிலைச் சொல்லி ஷாக் கொடுத்தார் பாலய்யா!

``எல்லோரும் ஏன் இதே கேள்வியைக் கேட்கிறீர்கள்? சரி... இந்த மேடையில் முதலும் கடைசியுமாகப் பதில் சொல்கிறேன். என் தந்தையோடு ரொமான்டிக் காட்சியில் நடித்த நடிகைகள் கிட்டத்தட்ட என் அம்மா போலத்தான். அவர்களை நான் அம்மா ஸ்தானத்தில் தான் பார்க்கிறேன். `ரௌடி ராமுடு கொன்டே கிருஷ்ணுடு' படத்திலும், `வேட்டக்காடு' படத்திலும் இருவருடன் நானும் இணைந்து நடித்தபோது, நான் அவர்களின் கெமிஸ்ட்ரியை அருகிலிருந்து சினிமா ரசிகனாய் ரசித்திருக்கிறேன்.

ஶ்ரீதேவி

என் தந்தையால் ரொமாண்டிக்காக நடிக்க முடியும் என்று நான் உணர்ந்து கொண்டதே ஶ்ரீதேவி அவர்களோடு அவர் நடித்த `பதி பந்துலு', 'ஆட்டகாடு', 'ரௌடி ராமுடு கொண்டே கிருஷ்ணுடு', ' சர்தார் பாப்பா ராயுடு', 'கஜ தொங்கா', 'கென்டாவீட்டி சிம்மம்', 'சத்யம் சிவம்', 'அனுராக தேவதா', 'பொப்பிலி புலி', 'ஜஸ்டிஸ் சௌத்ரி', 'வய்யாரி பாமலு வாகலமரி பார்த்தலு' போன்ற படங்கள் தான். என் மனதில் ஒரு தாயாராய் வீற்றிருப்பவரோடு எப்படி நான் கட்டிப்பிடித்து நடிக்க முடியும்? அதிலும் என் தந்தை ரொமான்டிக் பாடல் காட்சிகளில் தத்ரூபமாக இருப்பதற்காக அவர்களைச் செல்லமாக அடிப்பார், கொஞ்சம் ரஃபாக ஹேண்டில் செய்வார்!'' என்று சொல்லி டன் கணக்கில் அதிர்ச்சியை உண்டு பண்ணினார்.

உடனே ஶ்ரீதேவியோடு அவர் ஆட்டம் போட்ட பாடல்களை நீங்கள் யூ-டியூபில் தேடுவீர்கள் என்பது தெரியும். 'ஆகு சாட்டு பிண்டே தடிசே'வைத் தவிர மீதிப்பாடல்கள் பெரும்பாலும் ஊட்டியில் படமாக்கப்பட்டவை. அந்தப் பாடல்களைப் பார்த்து கோபம் வந்தால் நான் பொறுப்பல்ல!

சரி, இன்னொரு நல்ல விஷயத்தைப் பதிவு செய்கிறேன்...

தெலுங்கு சினிமாவில் அறிவிக்கப்படாத கர்ணனாக துணை நடிகர்களுக்கு இருப்பவர் தான் நம்மவர் பாலய்யா.

சமீபத்தில்கூட மறைந்த டோலிவுட் நடிகர் கௌதம் ராஜின் குடும்பத்துக்கு ஒரு பெரிய தொகையை உதவியாகக் கொடுத்திருக்கிறார். அதோடு அவரின் மகனுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்படி சிறிதும் பெரிதுமாய் உதவி செய்வது அவரது தந்தை என்.டி.ஆரின் வழக்கம். அதை சிக்கெனப் பிடித்துக்கொண்டார் பாலய்யா!

பாலய்யா வஸ்தாவய்யா 7

தந்தையுடன் பணிபுரிந்த சீனியர் லைட்மேன்கள், மேக்-அப் மேன்களில் ஆரம்பித்து துணை நடிகர் நடிகைகள் வரை இன்றும் நிதியுதவி நல்குகிறார் பாலய்யா.

பாலய்யாவுக்கு உதவி செய்வதைப்போலவே 'உபத்திரவம்' கொடுப்பதும் சால இஷ்டம்! அதென்ன உபத்திரவம் என்று ஷாக் ஆகிறீர்களா? தன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாய் புரணி பேசும் சினிமா ஆட்களை ஆள் வைத்துத் தூக்கிடுவார்.

தவறாக எண்ண வேண்டாம். ஹைதராபாத்தின் புறநகர்ப்பகுதியான சம்ஷாபாத்திலிருக்கும் தன் பண்ணை வீட்டுக்குத் தூக்கி வரச் செய்வார்.

அடிதடி எல்லாம் சினிமாவில் மட்டும் தான். பாலய்யா இந்த விஷயத்தில் அக்மார்க் பச்சைக் குழந்தை! மோதிரக்கையால் 'நங்'கென்று நாலு குட்டு வைப்பார். வலி உயிர் கொல்லும். ஆனால், உயிரை மட்டும் கொல்லாது!

எப்போதும் கண்கொத்திப் பாம்பாய் தன்னைச் சுற்றி வரும் பாப்பரஸி மீடியா ஆட்களை மட்டும் நோட் பண்ணி வைத்துக்கொள்வார். நேரம் வரும்போது, "வாங்க அண்ணைய்யா... சாப்பிட்டுட்டே பேசுவோம்!" என தன் பண்ணை வீட்டுக்கு அழைப்பார். 'பாலய்யா வீட்டு விருந்தா!' என மில்லியன் டாலர் சந்தோஷத்தோடு கிளம்பி வருபவர்களுக்கு வகையாய் மண்டையை வீங்க வைத்து அனுப்புவார்.

மண்டையில் குட்டுவதும் பிறகு செல்லமாக 'ஸாரி' கேட்டு அவர்களை தாஜா செய்து நட்பாவதும் பாலய்யா ஸ்டைல். இதுவரை இவரிடம் குட்டு வாங்கிய யாரும் மீடியா முன்போ, போலீஸ் ஸ்டேஷனுக்கோ சென்றதில்லை. எல்லாம் அவரது பாசமான `தாஜா' அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி! அந்த அளவுக்கு குளிப்பாட்டி விடுவார்!

பாலய்யா சின்ன வயதில் தி-நகரில் பள்ளியில் பயின்ற பொழுது சின்ஸியர் மாணவர் எல்லாம் இல்லை. சொல்லப்போனால் கண்டுக்கவும் கண்டிக்கவும் ஆள் இல்லாததால் பள்ளிக்கு அடிக்கடி 'ஸ்கூட்' விடுவார். இதனால் வீட்டுக்கே வந்து பாடம் எடுக்க ஆசிரியர்களை நியமித்து வீட்டிலேயே பரீட்சை எழுதவும் வைத்தார் தந்தை என்.டி.ஆர்!

பாலய்யா

தந்தைக்கு பாலய்யா படிப்பார் என்ற நம்பிக்கை போன நாளில் பாலய்யா ஒரு சம்பவத்தை பண்ணினார். அது பாலய்யா மீது தந்தைக்கு வேறுவிதமான நம்பிக்கையை அள்ளித்தந்தது. வீட்டிலிருந்து திருப்பதிக்கு யாரிடமும் சொல்லாமல் பாத யாத்திரை கிளம்பி விட்டார். அம்மா பசவதாரகம் அம்மாள் மகனைக் காணாமல் மனமொடிந்து போனார். சாப்பிடாமல் கொள்ளாமல் அழுது அரற்றிக்கொண்டிருந்தார்.

காவல்துறை ஒரு பக்கமும், குடும்பத்தினர் ஒரு பக்கமும் தேட கடைசியாய் திருப்பதியில் வைத்து பாலய்யாவை மீட்டனர்.

"ஏன் சாமி வீட்டைவிட்டு ஓடிப்போனே?" என்று கேட்டபோது பாலய்யா சொன்ன பதில் நிஜமாகவே பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது!

"ஓடிப் போகலை அம்மா... நடந்து தான் போனேன்!" என்று காமெடி பண்ணியவர்,

"நாம மனசுல ஒரு வேண்டுதலை வெச்சுட்டு அதை யார்கிட்டயும் சொல்லாமல் நிறைவேற்றினால் பலன் கிடைக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னான்!" என்று அப்பாவியாய் சொல்லியிருக்கிறார் பாலய்யா. அப்பா மீது அவ்வளவு பாசமா... அல்லது பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட பாலய்யா கண்டுபிடித்த டெக்னிக்கா என்று நிஜத்தில் வீட்டில் எல்லோரும் குழம்பித்தான் போனார்கள்.

பாலய்யா

வீட்டில் மகனுக்கு இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் டியூசன் வைத்து அப்போதே தேசிய அளவில் இடம்பிடிக்க அச்சாரம் போட்டார் சீனியர் என்.டி.ஆர். பாலய்யா விளையாட்டுப்பிள்ளையாக இருந்தாலும். இரு மொழிகளிலும் பேசக் கற்றுக்கொண்டார். அது இப்போதுவரை அவருக்கு உதவி வருகிறது.

படு சுட்டியாக இருந்தாலும், தந்தைமீது வெறித்தனமான அன்பு கொண்டவர் தான் பாலய்யா. ஆனால், தந்தையை ஒரு விஷயத்தில் கடுமையாக எதிர்த்தார்... அது பற்றி அடுத்த எபிசோடில் சொல்கிறேன்!

(ஆட்டம் களைகட்டும்...)

Akhil Akkineni: அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் திருமணம்; மகனின் நிச்சயதார்த்தத்தை அறிவித்த நாகர்ஜுனா

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவுக்கும், தமிழில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த சில மாத... மேலும் பார்க்க

Pushpa 2: மற்றுமொரு படத்திலிருந்து விலகுகிறாரா DSP?! - சிக்னல் கொடுத்த சாம் சி.எஸ்

`புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இத்திரைப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வரவேற்பை பெற்றதோடு அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருதையும் வாங்கி தந்தது. இவர... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா: லோகேஷ், சிவகார்த்திகேயன், கமல் - இது வேற லெவல் பாலய்யா

நம்ம பாலய்யாவின் அடுத்த ரிலீஸ் `டாகு மகாராஜ்' டீசரைப் பார்த்துட்டீங்களா..? என்னது பார்க்கலையா..? உடனே ஓடிப்போய் பார்த்திடுங்க!ஆந்திரா - தெலங்கானாவில் ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு 'ஜனவரி 12- சங்கராந்தி' ரி... மேலும் பார்க்க

Pushpa 2: `அவர் 6 அடி தங்கம்' - பிரபாஸ் குறித்து அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் பிரபாஸ் குறித்தி நெகிழ்வான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.புஷ்பா 2 பட ரிலீஸை எதிர்நோக்கியிருக்கிறார் அல்லு அர்ஜுன். ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்துள்ள ப... மேலும் பார்க்க

Ram Charan: சபரிமலை மாலையுடன் தர்காவில் வழிபட்ட ராம் சரண்; நெகிழ்ந்த ரசிகர்கள்

பிரபல நடிகரான ராம் சரண், இயக்குநர் ஷங்கரின் ' இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகியிருந்த நிலையில், இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனப் ப... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா - 11: 'ஜென்ம விரோதிகள் இல்ல; ஆனா..' - அண்ணன் மகன் மீது ஏன் ஈகோ பாராட்டுகிறார்?

எல்லோரும் கங்குவா பார்த்து 'கங்கு' போலக் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கிறீர்கள் தானே? அதை ஓரமாக வைத்துவிட்டு வேறொரு `கங்கு' பற்றி தெரிந்து கொள்ள ரெடியா..?தெலுங்கு சினிமா உலகில் சாம்பல் பூத்த 'கங்கு' ப... மேலும் பார்க்க