World Chess Championship: '23 வது நகர்விலேயே டிரா செய்த லிரன் - குகேஷ்... 2ம் சுற்றில் என்ன நடந்தது?
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் சுற்று நேற்று நடந்திருந்தது. முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரன் வென்றிருந்தார். இந்நிலையில் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாவது சுற்று ஆட்டத்தின் முக்கிய தருணங்கள் இங்கே.
இரண்டாம் சுற்றில் நடப்பு உலக சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் வெள்ளை காய்களைக் கொண்டும், கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கருப்புக் காய்களைக் கொண்டும் ஆடியிருந்தனர்.
டிங் லிரன் வெள்ளை காய்களைக் கொண்டு முதல் நகர்வாக தனது சிப்பாயை e4-க்கு நகர்த்தினார். அதற்கு, குகேஷ் தனது சிப்பாயை e5-க்கு நகர்த்தினார்.
இந்த ஆட்டத்தை இத்தாலியன் ஓப்பனிங் மூலம் கொண்டுசென்றார் டிங். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் டிங் லிரன் மிகவும் நிதானமான மனநிலையுடன் இந்த ஆட்டத்தை ஆடினார்.
இருவரும் வேகமாக விளையாடிய நிலையில் இத்தாலியன் ஓப்பனிங்கில் 4 நைட் வேரியேசன் ஆடினார்கள். (Four Knight Variation).
கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு சிறப்பான ஓப்பனிங் நகர்வுகளுடன் வந்துள்ளார். விளையாடிய இரு போட்டிகளிலும் ஓப்பனிங்கில் நாவல்டிகளை ஆடி குகேஷிற்கு சிரமத்தைத் தருகிறார். 2-வது ஆட்டத்தில் 9-வது நகர்வில் தனது சிப்பாயை a5-க்கு நகர்த்தி குகேஷை யோசனைக்குத் தள்ளினார் டிங்.
ஆட்டம் வெறும் 23 நகர்வுகளை கடந்திருந்த போதே டிரா செய்து இருவரும் கிளம்பினார்கள்.
இந்த டிரா குறித்து குகேஷ் பேசுகையில், “கருப்புக் காய்களைக் கொண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் டிரா செய்வது எப்போதும் இனிமையானது தான். இது வெறும் ஆரம்பம் தான், எனக்கு இன்னும் நிறைய ஆட்டங்கள் மீதமுள்ளன.” என்றார்.
இரண்டு சுற்றுகளின் முடிவில் டிங் லிரன் 1.5 புள்ளிகளையும் குகேஷ் 0.5 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றனர்.
அடுத்து நடக்கவுள்ள போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெள்ளை காய்களையும், கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் கருப்புக் காய்களையும் கொண்டு விளையாடுவார்கள். நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று குகேஷ். புள்ளிகளை சமன் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...