``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு
எலான் எனும் எந்திரன் 5 : இந்திய டார்கெட்... அம்பானி Vs மஸ்க் - இணையத்தில் கால் பதித்த எந்திரன்
பூமியின் தாழ் சுற்றுவட்டப் பாதையில் ஆயிரக் கணக்கான ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படும். யாராவது அணு ஏவுகணைகளை ஏவினால் அதை இடைமறித்து, தாக்கி அழிக்க இது உதவும் என லொவெல் வுட் & எட்வர்ட் டெல்லர் என்கிற இருவர் 1980களின் பிற்பகுதியில் இந்தத் திட்டத்தை அமெரிக்க அரசிடம் முன் வைத்தனர்.
அப்படியே, 2010-களின் பிற்பகுதிக்கு வந்தால், எல்லோரும் ஸ்பேஸ் எக்ஸையும் எலான் மஸ்கையும் அண்ணாந்து வானத்தில் பார்த்துக் கொண்டிருந்த போது, மஸ்க் மட்டும் பூமியைப் பார்த்தார். நாம் இணைய சேவை வழங்கத் தொடங்கினால் என்ன? நம்மிடம் செயற்கைக் கோள்களை அனுப்புவதற்கான வசதி இருக்கிறதே? அனுப்பலாமென 2019ல் தொடங்கியது தான் ஸ்டார்லிங்க்.
பொதுவாக, வெகுஜன மக்களுக்கு அதிவேக இணையம் என்றால் அது கேபிள்கள் மூலம் தான் சாத்தியம். அதாவது இணைய வழி தகவல் பரிமாற்றம் ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபில்கள் மூலம் நடக்கும். இதுவே ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபில்கள் இல்லாமல், செயற்கைக் கோள்கள் வழியாக இணைய வழி தகவல் பரிமாற்றம் செய்ய முடிந்தால் அதை சேட்டிலைட் பேஸ்ட் பிராட்பெண்ட் என்பர்.
பொதுவாக, கேபிள்கள் வழியான இணைய சேவை அதிவேகமானதாகவும், தொடர்ந்து நிலையாக கிடைக்கும் வகையிலும் இருக்கும். இப்போது இந்தியாவில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் தான் அதிவேக இணைய சேவை சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது.
செயற்கைக் கோள் வழி இணையத்தில் முதல் பிரச்னையே லேட்டன்சி ரேட் தான். அதாவது நாம் கூகுளில் ஒரு விஷயத்தைத் தேடத் தொடங்கியது முதல், அதற்கான விடை நம் டிஸ்பிளேவில் தெரியும் வரையிலான கால தாமதம் தான் லேட்டன்சி ரேட். இந்த தாமதம் செயற்கைக் கோள் வழி இணையத்தில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
செயற்கைக் கோள் வழி இணையத்தில் ஏற்படும் லேட்டன்சி ரேட்டைக் குறைக்கவும், தன் இணைய சேவையை பிரபலப்படுத்தவும் இரண்டு விஷயங்களைக் கையில் எடுத்தார் எலான் மஸ்க்.
ஸ்டார்லிங்கின் செயற்கைக் கோள்கள் பூமிக்கு அருகிலேயே இருக்கும். அதாவது பூமியின் கீழ் சுற்றுவட்டப் பாதையிலேயே (Low Earth Orbit) சுமார் 300 - 600 கிலோமீட்டருக்குள் இயங்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் லேட்டன்சி ரேட் கணிசமாகக் குறைத்துக் காட்டினார்.
ஸ்டார்லிங்கின் சேவைகள் பெரும்பாலும் நகர்புறம் அல்லாத இடங்களுக்கான தீர்வென சந்தைப்படுத்தலாம் என களமிறங்கினார்.
இணைய சேவையில் வலது கால் எடுத்து வைப்பதை முடிவு செய்த பிறகு, 2019ல் முதல் சுற்று செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பினார் எலான் மஸ்க். 2024ல் கிட்டத்தட்ட 7,000 செயற்கைக் கோள்கள் ஸ்டார்லிங்கின் பெயரோடு விண்வெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 34,000 ஆக அதிகரிக்கலாம் என ஸ்டார்லிங்க் இலக்கு வைத்துள்ளது
2019ல் செயற்கைக் கோள்களை அனுப்பத் தொடங்கிய ஸ்டார்லிங்க், தன் இணைய சேவையை 2020ல் வழங்கத் தொடங்கியது. எலான் மஸ்கின் புகழால் 2022க்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களையும், 2024 செப்டம்பருக்குள் 4 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கடந்து பல டெலிகாம் நிறுவனங்களின் பிபியை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 90களுக்கும் மேற்பட்ட நாடுகள் & நிலப்பரப்புகளில் தன் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டார்லிங்க், இந்தியாவிலும் நல்ல நாள் பார்த்து கிரகப் பிரவேசம் நடத்த 2022ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றிய அரசோடு பேசிக் கொண்டிருக்கிறது.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங் இந்திய அரசிடம் Global Mobile Personal Communication by Satellite உரிமத்துக்கு அனுமதி கோரியுள்ளது. இந்த வகையான உரிமங்கள் இந்திய அரசால் ஒரு நிறுவனத்துக்கு 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எந்த பகுதிகளில் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த பகுதிகளுக்கு மட்டும் நிறுவனங்கள் செயற்கை கோள் வழியாக பிராட்பேண்ட் சேவையை வழங்கலாம்.
தற்போது இந்தியாவில் ஏர்டெல் (ஒன்வெப்), ஜியோ (ஜியோ சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ்) ஆகிய இரு நிறுவனங்களுக்கு சேட்டிலைட் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கும் உரிமம் வழங்கப்பட்டிடுள்ளது.
ஆரம்பத்தில், எலான் மஸ்கை அலைகழித்துக் கொண்டிருந்த இந்திய அரசு, ஒரு கட்டத்தில் ஸ்டார்லிங்குக்கு அனுமதி கொடுப்பதைப் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது, இந்திய அரசு சுட்டிக்காட்டி இருக்கும் பாதுகாப்புப் பிரச்னைகளை ஸ்டார்லிங்க் சரி செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதோடு, சில இந்திய அரசின் விதிகளை, தொழில்நுட்ப ரீதியாக நிறைவேற்ற முடியாது என்பதால், அவ்விதிகளிலிருந்து ஸ்டார்லிங்குக்கு விலக்களிக்கவும் எலான் மஸ்க் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் ஜியோ சேவையைத் தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்கின் வருகையை விரும்பவில்லை. ஏர்டெல் & ஜியோ இணைந்து ஏறத்தாழ இந்தியாவின் 75% இணைய & தொலைபேசி சேவைச் சந்தையைக் கையில் வைத்திருக்கிறது.
இந்திய அரசோ, சேட்டிலைட் இணைய சேவை ஸ்பெக்ட்ரத்தை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்வோம் என்கிற மன நிலையில் இருக்கிறது. ஆனால் ஜியோவோ, அது சரியல்ல, அது நியாயமாக இருக்காது, சேட்டிலைட் ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விட வேண்டும். டெலிகாம் சேவை நிறுவனங்கள் வழக்கம் போல ஏலத்தில் பங்கெடுக்க வேண்டும் என்கிறது ஜியோ.
ஏற்கனவே எலான் மஸ்க், பல்வேறு ராணுவ செயற்கைக் கோள்களை ஏவ உதவுவதாக ஸ்பேஸ் எக்ஸ் அத்தியாயத்தில் பார்த்தோம். அது போக தொடக்கத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்த அனுமதித்த எலான் மஸ்க், தற்போது கொஞ்சம் ரஷ்யாவுக்கு சார்பாக ஸ்டார்லிங்க் சேவைகளை கட்டுப்படுத்துவதாாகவும் பல்வேறு செய்திகளைப் பார்க்க முடிகிறது. இதுவரை உக்ரைன் சுமார் $100 மில்லியன் அளவுக்கான ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தி இருக்கலாமென உக்ரைன் தரப்பு அதிகாரி ஒருவரே சொன்னதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஸ்டார்லிங்கை வெளிப்படையாக ராணுவ பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் ஸ்டார்ஷீல்ட் என்கிற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கி, அதை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கப் போவதாக கடந்த 2022ல் அறிவித்தார் எலான் மஸ்க். 2023ல் அமெரிக்க விண்வெளிப் படை அமைப்பிடமிருந்து ஸ்டார்ஷீல்டுக்கு, ராணுவத்துக்கான பிரத்யேக செயற்கைக் கோள் வழித் தொலைத் தொடர்பு சேவையை வழங்க, முதல் ஒப்பந்தம் கிடைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க் மூலம் உயர உயரப் பறந்து கொண்டிருந்த இதே எலான் மஸ்க் தான், சாலையில் ஓடும் கார்களைப் பற்றியும் ஒரு பலமான மாற்றுக் கருத்து வைத்திருந்தார். அதன் பெயர் டெஸ்லா.!
தொடரும்..!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...