ரூ. 3,383 கோடி சொத்துடன் முதலிடம் பிடித்த பாஜக எம்.எல்.ஏ!
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 43.42 கோடி என்று ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ADR) கூறியுள்ளது; இது, 2019 ஆம் ஆண்டின் சராசரியான ரூ. 22.42 கோடியைவிட இரு மடங்கு அதிகமாகும்.
மேலும், முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் குறித்த தகவல்களையும் ஏடிஆர் வெளியிட்டுள்ளது.
கிழக்கு கத்கோபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான பராக் ஷா (பாஜக) ரூ. 3,383 கோடியுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் பன்வேல் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த் ராம்சேத் தாகூர் (பாஜக) ரூ. 475 கோடியுடன் உள்ளார்.
ரூ. 447 கோடியுடன் மலபார் ஹில் எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோஹத் (பாஜக) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஒவாலா மஜிவாடா தொகுதி எம்.எல்.ஏ. பிரதாப் பாபுராவ் சர்நாயக் (சிவசேனை) ரூ. 333 கோடியுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐந்தாவது இடத்தில் மன்கர்ட் சிவாஜிநகர் எம்.எல்.ஏ. அபு அசிம் அஸ்மி (சமாஜவாதி) ரூ. 309 கோடியுடன் உள்ளார்.
ஆறாவது இடத்தில் ரூ. 299 கோடியுடன் பலுஸ்-கடேகவன் எம்.எல்.ஏ. கதம் விஸ்வஜித் பதங் ராவ் (காங்கிரஸ்), ஏழாவது இடத்தில் ரூ. 262 கோடியுடன் ஹிங்னா எம்.எல்.ஏ. சமீர் தத்தாத்ரயா மேகே (பாஜக), எட்டாவது இடத்தில் ரூ. 235 கோடியுடன் பரந்தா எம்.எல்.ஏ. டாக்டர். தனஜி ஜெயவந்த் சாவந்த் (சிவசேனை), ஒன்பதாவது இடத்தில் ரூ. 212 கோடியுடன் நய்கவன் எம்.எல்.ஏ. ராஜேஷ் சம்பாஜி ராவ் பவார் (பாஜக), ரூ. 208 கோடியுடன் வத்கவன் ஷேரி எம்.எல்.ஏ. பாபு சாஹிப் துகாராம் (தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார்) பத்தாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க:விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
மகாராஷ்டிரத்தில் சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டணியில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.
இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிர்க்கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 10, சமாஜவாதி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.