ரூ. 1.7 டிரில்லியன் கடன் தள்ளுபடி! ஆனால், பயனில்லை!!
நிதியாண்டு 2024-ல் ரூ. 1.7 டிரில்லியன் கடனை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.
மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த தரவுகளின்படி, இந்திய வங்கிகள் 2023-24 நிதியாண்டில் ரூ. 1.7 டிரில்லியன் (ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி) கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே.
2023 ஆம் நிதியாண்டில் ரூ. 2.08 டிரில்லியன் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 2020 ஆம் நிதியாண்டில் ரூ. 2.34 டிரில்லியன் கடன்களும், 2021-ல் ரூ. 2.03 டிரில்லியன் கடன்களும், 2022 ஆம் நிதியாண்டில் ரூ. 1.75 டிரில்லியன் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
கடந்த நிதியாண்டில், அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 18,317 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 18,264 கோடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ரூ. 16,161 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.
இதையும் படிக்க:சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசம்.! சட்டம் கடுமையாக்கப்படும்: மத்திய அரசு
தனியார் வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ரூ. 11,030 கோடி கடனையும், ஐசிஐசிஐ வங்கி ரூ. 6,198 கோடி கடனையும், ஆக்சிஸ் வங்கி ரூ. 8,346 கோடி கடனையும் தள்ளுபடி செய்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் வங்கி வாரியக் கொள்கைகளின்படி, முழுமையாக வழங்கப்பட்ட செயல்படாத சொத்துக்களைத்தான் (NPAs) வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன.
மேலும், பங்கஜ் சௌத்ரி கூறியதாவது, ``வங்கிகளின் இத்தகைய தள்ளுபடி, கடன் வாங்குபவருக்கு பயனளிக்காது. ஏனெனில், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தும் பொறுப்பில் தொடர்ந்து இருப்பர்’’ என்று தெரிவித்தார்.