முதல்வர் யார்? பிரதமர் மோடி, அமித் ஷாவின் முடிவை ஏற்போம்: சிவசேனை
மகாராஷ்டிர முதல்வர் யார் என்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என சிவசேனை எம்.பி. பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசித்தப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய சிவசேனை எம்.பி., பிரதாப்ராவ் ஜாதவ்,
மகாராஷ்டிர தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு நேரம் ஒதுக்கி பிரசாரத்தில் பங்களித்த உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்க ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரை சந்தித்து நன்றி கூறினேன்.
அமித் ஷா எங்கு பேரணி மேற்கொண்டாரோ அந்தத் தொகுதிகளிலெல்லாம் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதனால், சிவசேனை கட்சி சார்பில் அமித் ஷாவை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
சிவசேனை ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் ஆகியோர் தகுதியுடைய தலைவர்கள். மூவருமே தங்கள் கட்சியில் தலைமை பொறுப்பில் உள்ளனர். எங்களுக்கும் தலைமைப் பொறுப்பில் அமர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், மகாயுதி கூட்டணி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எடுக்கும் முடிவுகளை எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வோம். இதனை ஏக்நாத் ஷிண்டேவும் ஏற்கெனவே அறிவித்துள்ளார் என ஜாதவ் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர முதல்வர் பதவி குறித்து முன்பு செய்தியாளர்களுடன் பேசிய ஏக்நாத் ஷிண்டே, நான் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு வாழ்த்து தெரிவித்தேன். மகாராஷ்டிர முதல்வர் யார் என்பதில் எந்தவித ஆலோசனையும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உடன்படுவோம் எனத் தெரிவித்திருந்தார்.