புயல் சின்னம்: இலங்கையில் கனமழை! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கார்கேவும் ராகுலும் செவ்வாய் கிரகம் சென்று விடுங்கள்: பாஜக
மகாராஷ்டிரப் பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியிருந்தார். தில்லியில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) சம்விதான் ரக்ஷக் அபியான் விழாவில் பங்கேற்ற மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது, ``அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தங்களுடனேயே வைத்துக் கொள்ளட்டும்; எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவையில்லை.
வாக்குச் சீட்டில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், அவர்களின் நிலை என்ன? அவர்கள் எங்கு நிற்கிறார்கள் என்பது தெரியும்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கார்கேவின் குற்றச்சாட்டை மறுத்த பாஜக எம்.பி.யும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறியதாவது, ``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இழுப்பதன்மூலம், அவர்கள் தங்கள் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். பிரச்னை இயந்திரத்தில் இல்லை; பிரச்னை காங்கிரஸ் தலைமையில்தான் உள்ளது. இயந்திரம் சரியாகத்தான் உள்ளது; ராகுல்தான் சரியில்லை. அவரை மாற்றுங்கள். ராகுலின் மோசமான மேலாண்மையால்தான் தேர்தலில் தோல்வியடைந்துள்ளீர்கள்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையம், அமலாக்க இயக்குநரகம், மத்திய புலனாய்வுப் பிரிவு, நீதித்துறை ஆகியவற்றை கார்கே விரும்பவில்லை; பிரதமர் மோடி அரசையும் அவர் விரும்பவில்லை.
உங்களுக்கு எதுவும் வேண்டாம். செவ்வாய் கிரகம்தான் உங்களுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்று நினைக்கிறேன். அங்குதான் யாரும் இல்லை. நீங்கள் ராகுலுடன் அங்கு சென்று விடுங்கள்’’ தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பேரவைத் தேர்தலில் 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டணியில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.
ஆனால், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிர்க்கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 10, சமாஜவாதி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.
இதையும் படிக்க:ரூ. 1.7 டிரில்லியன் கடன் தள்ளுபடி! ஆனால், பயனில்லை!!