சென்னை: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் வீட்டில் பாலியல் தொழில்; கூண்டோடு சிக்கிய கும்பல்!
சென்னை கோயம்பேடு பகுதியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரின் மகனுக்குச் சொந்தமான வீடு உள்ளது. காவல்துறை அதிகாரியின் மகன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அதனால் வீட்டை இலங்கையைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கு வாடகைக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை நிர்மலா, கெஸ்ட் ஹவுஸாக பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந்தநிலையில் அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாகச் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினர் அந்த வீட்டைக் கண்காணித்தனர். அப்போது வெளிநாடுகளைச் சேர்ந்த சில பெண்கள் அங்குத் தங்கியிருப்பதும், அந்த வீட்டுக்குச் சிலர் வந்து செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்த தகவல் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கோயம்பேடு போலீஸ் டீம் அந்த வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குப் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. பாலியல் தொழிலுக்கான செல்போன் செயலி ஒன்று மூலம் இந்த வீட்டுக்கு வருபவர்கள் அங்குத் தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன்கள், கார்கள், பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் வெளிநாடுகளைச் சேர்ந்த ஒன்பது பெண்களையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...