செய்திகள் :

Kichcha Sudeep: `24 மணி நேரத்தில் மாறிய என் வாழ்க்கை' - தாயின் மறைவு குறித்து கிச்சா சுதீப் உருக்கம்

post image

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் `கிச்சா' சுதீப். கூடவே, 2013 முதல் 10 வருடங்களாகக் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் சுதீப், தற்போது சென்றுகொண்டிருக்கும் பிக் பாஸ் சீஸனோடு நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கடந்த வாரம்தான் அறிவித்திருந்தார். இவ்வாறிருக்க, சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக் குறைவால் நேற்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து சுதீப்புக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கிச்சா சுதீப்

இந்த நிலையில், சுதீப் தன்னுடைய தாயார் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்டைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ``என் தாயார் மிகவும் அன்பானவர், பாரபட்சமற்றவர். என் வாழ்வில் மிகவும் மதிப்புமிக்கவர். மனித வடிவில் எனக்கு அவர் கடவுளாக இருந்தார். என்னுடைய கொண்டாட்டம் அவர். எனக்கு ஒரு ஆசிரியராகவும், உண்மையான நலம் விரும்பியாகவும் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடைய முதல் ரசிகை. இப்போது என்னுடைய அழகான நினைவு அவர். நான் இப்போது உணரும் வலியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த வெற்றிடத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 24 மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது.

தினமும் காலை 5:30 மணிக்கு, `குட் மார்னிங் கந்தா' என அவரிடமிருந்து என் செல்போனுக்கு மெசேஜ் வரும். அதுபோல, அவரிடமிருந்து கடைசியாக அக்டோபர் 18-ம் தேதி மெசேஜ் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் அந்த மெசேஜை பார்க்கவில்லை. இத்தனை வருடங்களில் இதுதான் முதல்முறை. போன் செய்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று விசாரிக்க விரும்பினேன். ஆனால், சனிக்கிழமை பிக் பாஸ் எபிசோடுக்கான விவாதங்கள் என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டன. பிக் பாஸ் மேடைக்குச் செல்வதற்கு முன், என் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எனக்கு அழைப்பு வந்தது.

அம்மா சரோஜா சஞ்சீவுடன் கிச்சா சுதீப்

உடனே மருத்துவமனையிலிருந்த என் சகோதரிக்கு போன் செய்து டாக்டர்களிடம் பேசிவிட்டு மேடைக்குச் சென்றேன். பின்னர் சிறிது நேரத்தில், அவர் சீரியஸாக இருப்பதாக செய்தி வந்தது. அப்போதுதான் இதுபோன்ற உதவியற்ற நிலைமையை முதல்முறையாக அனுபவித்தேன். என் அம்மாவைப் பற்றி மனதில் ஒரு பயம். இருப்பினும், அந்த எபிசோடை நான் நிதானமாகச் செய்திருப்பேயானால், எல்லா குழப்பங்களுக்கிடையில் நான் ஏற்றுக்கொண்ட வேலையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்ததற்காக நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

சனிக்கிழமை எபிசோட் ஷூட் முடிந்து நான் மருத்துவமனைக்கு விரைந்தேன். மருத்துவமனையைச் சென்றடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு என் அம்மாவுக்கு வென்டிலேட்டர் போடப்பட்டது. என்னுடைய அம்மா சுயநினைவில் இருக்கும் போது என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. இருப்பினும், இந்த யதார்த்தத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. நான் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் என்னை இறுக்கமாகக் கட்டிப்பிடித்த என் அம்மா, அடுத்த சில மணி நேரத்தில் இல்லை.

இதுவொரு கடினமான உண்மை. மனம் அதை ஏற்றுக்கொள்வதற்கு நேரமாகும். என் அம்மா ஒரு சிறந்த ஆத்மா. அவரை நிச்சயம் நான் மிஸ் பண்ணுவேன். இயற்கை மற்றும் கடவுளின் விருப்பத்தால் பூமியிலிருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறுஞ்செய்திகள் மற்றும் ட்வீட்கள் மூலம் என்னைத் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. என் வாழ்வின் விலைமதிப்பற்ற முத்து போய்விட்டது. அமைதி நிறைந்த இடத்தை அவர் அடைந்துவிட்டார் என்று நான் நம்புகிறேன். நன்றாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன், மிஸ் பண்ணுகிறேன்" என்று சுதீப் குறிப்பிட்டிருக்கிறார்.