செய்திகள் :

ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!

post image

மதுரையைச் சேர்ந்த சிவா (ரியோ ஜார்ஜ்), சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கும் கோவையைச் சேர்ந்த சக்திக்கும் (மாளவிகா மனோஜ்), இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாட்டுத் திருமணம் நடக்கிறது.

இருவரும் சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகின்றனர். தொடக்கத்தில் காதல், ஊடல், செல்ல மோதல் எனப் பூக்கத்தொடங்கும் திருமண வாழ்க்கை, ஒரு சில மாதங்களிலேயே பிரச்னைகளால் நிறைந்து நீதிமன்ற படி ஏறுகிறது.

ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...
ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...

விவாகரத்து வேண்டாம் எனச் சொல்லும் சிவாவிற்கு ஆதரவாக நாராயணனும் (ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்), விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக நிற்கும் சக்திக்கு ஆதரவாக லட்சுமியும் (ஷீலா ராஜ்குமார்) வாதாடுகிறார்கள்.

இருவருக்குள்ளும் என்ன பிரச்னை, இந்த மோதல் சமாதானத்தில் முடிந்ததா, இல்லை விவாகரத்தில் முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியிருக்கும் 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம்.

கலாய் ஆன உடல்மொழியைக் கச்சிதமாகக் கொண்டுவந்து கலகலப்பூட்டும் ரியோ ராஜ், மனைவி மீதான காதல் வலி, ஆற்றாமையில் குமையும் தருணங்கள் போன்றவற்றைப் போராடிக் கரைசேர்க்கிறார்.

காதல், அப்பாவித்தனம், கோபம், ஆக்ரோஷம், அழுகை, குற்றவுணர்வு என எக்கச்சக்க எமோஷன்களைக் கொண்ட சக்தியாக, அக்கதாபாத்திரத்தின் மீட்டரைப் புரிந்து நடித்திருக்கிறார் மாளவிகா மனோஜ்.

வலியைச் சுமந்து வாழும் ஆர்ப்பாட்டமில்லாத வழக்குரைஞராக ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்தும், துடிப்பான வழக்குரைஞராக ஷீலாவும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். வரும் காட்சிகளை எல்லாம் தன் ஒன்லைனர்களால் கலகலப்பாக்கியிருக்கிறார் ஜென்சன் திவாகர்.

ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...
ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...

ரோம்-காம்-க்குத் தேவையான கலர்புல்லான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் மாதேஷ் மாணிக்கம். சுவாரஸ்ய கட்களாலும், காட்சிகளுக்கு இடையேயான டிரான்சிஷன் எஃபெக்ட்ஸாலும் முதல்பாதியை ரசிக்க வைக்கிறார் படத்தொகுப்பாளர் கே.ஜி.வருண்.

சித்து குமார் இசையில், எல்லா பாடல்களும் கதையோட்டத்தோடு வந்து, தேவையானதைச் செய்திருக்கின்றன. பின்னணி இசையில், காமெடி, காதல், சோகம் என மூன்றையும் முறுக்கிவிட்டிருக்கிறார் சித்து!

தம்பதியினருக்கு இடையிலான காதல், ஊடல் எனத் தொடங்கி, நேரடியாகக் கதையில் நுழைகிறது படம். இருவருக்குமான குணாதிசயங்கள், அவற்றால் தலையெடுக்கும் முரண்கள் போன்றவற்றைக் கலகலப்பாக விவரித்திருப்பது எளிதாகப் படத்திற்குள் ஒன்ற வைக்கிறது.

ஆனால், இரு கதாபாத்திரங்களையும் சமநிலையோடு நேர்மையாகக் கட்டமைக்காமல், பெண் கதாபாத்திரத்தைத் தரம் தாழ்ந்தும், அதன் கண்ணியத்தைக் கொச்சைப்படுத்தியும் காட்டியிருப்பதோடு, ஆண் கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க நல்லவராகவும், அவர் செய்யும் தவறுகளுக்குக் கூட நியாயம் கற்பிக்கும் காட்சிகளுடனும் காட்டியிருப்பது எழுத்தின் நேர்மையின்மையே காட்டுகிறது.

ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...
ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...

காவல் நிலையம், நீதிமன்றம் எனச் சட்டங்களுக்குள் நுழையும் உறவுச் சிக்கல் பிரச்னையில், ஆண்களின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவது ஓகேதான் என்றாலும், ஆண் கதாபாத்திரத்தின் பெண் மீதான வன்முறையையும், அதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெண் பாதிக்கப்படுவதையும் எள்ளி நகையாடி விளையாடுவது, எழுத்தின் பொறுப்பின்மையையே காட்டுகிறது.

மனைவி தரப்பில் பொய்யான வழக்கைச் ஜோடிப்பதாக மேம்போக்காக மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு நியாயம் செய்யும் அழுத்தமான காட்சிகள் இல்லாதது மைனஸ்.

'தோழர்' என்ற வார்த்தையை நகைப்புக்குள்ளாக்கியது, மனைவியின் தந்தையைக் கணவன் தரக்குறைவாகப் பேசுவதை எளிதாகக் கடந்துபோவது, ரீல்ஸ் போடுவதைக் கலாசார சீரழிவாக முன்னிறுத்துவது, முற்போக்குப் பேசும் பெண்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாதவர்கள் என்கிற ரீதியில் கதாபாத்திரங்களை வடிவமைத்தது, பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையை அப்பாவித்தனம் என நியாயப்படுத்த முயன்றது என அபத்த அப்பளங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கிறது திரைக்கதை.

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்களையும், அவற்றுக்குப் பின்னாலுள்ள போராட்டங்களையும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், காட்சிகளை வடிவமைத்தது எழுத்தின் அரசியல் போதாமையையே காட்டுகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்குக் கூட முற்போக்காகச் சிந்திக்கும் நவீன பெண்கள்தான் காரணமா டியூட்?

ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...
ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...

இவற்றுக்கு இடையில், ஜென்சன் திவாகருக்கும் டிடெக்டீவ்விற்கு இடையிலான காமெடிகள் சிரிப்பிற்கு கேரன்ட்டி தருகின்றன. மேலும், பெண்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க, கணவன் - வீட்டுப் பெண் பணியாளர் உரையாடலோடு, மனைவிக்கும் சமூக செயற்பாட்டாளரான பெண் ஒருவருக்குமான உரையாடலையும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று பின்னிய விதம் ரசிக்க வைக்கிறது.

"ஸ்விட்ச் போட்டா போதும் வாஷிங் மெஷின் ஓடும்; ஆனா அந்த ஸ்விட்சக்கூட ஒரு பொண்ணுதான போட வேண்டியிருக்கிறது" போன்ற வசனங்கள் பெண்ணின் குரலாக ஒலிப்பது ஆறுதல்.

நவீனக் கால தம்பதிகளின் உறவுச் சிக்கலைக் கலகலப்பாகப் பேச முயன்ற ஐடியா கவனிக்க வைத்தாலும், அப்பட்டமான ஆணாதிக்க பார்வையிலேயே மொத்த திரைப்படத்தையும் வடிவமைத்தது படத்தையே 'பொல்லாததாக' ஆக்கியிருக்கிறது.

Aarav Studios: ``இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகள்'' - தயாரிப்பாளராகும் பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று, தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் ஆரவ். இந்த ஆண்டு வெளியான அஜித் குமாரின் விடா முயற்சி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நெகட்டிவ் பாத்திரங... மேலும் பார்க்க

Amaran: ஓராண்டை நிறைவு செய்த `அமரன்'; BTS புகைப்படங்களைப் பகிர்ந்த சாய் பல்லவி | Photo Album

'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமரன்' படத்தில் சாய் பல்லவி'அமர... மேலும் பார்க்க

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album

சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் 'பைசன்' படத்தின் BTS புகைப்படங... மேலும் பார்க்க

'என் உயிரின் மெல்லிசையே' - காதலியைக் கரம்பிடித்த `டூரிஸ்ட் பேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.அப்படத்தின் வெற்றியைத்... மேலும் பார்க்க