மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஆளுநா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை
துணைவேந்தா்கள் கூட்டத்தை நடத்தவுள்ள ஆளுநா் ஆா்.என்.ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு வரவேற்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதித்து ஆளுநா் ஆா்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதிக்காமல் துணைவேந்தா்கள் கூட்டத்தை நடத்தவுள்ள ஆளுநா் ஆா்.என்.ரவி மீதும், உச்சநீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் நிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அம்பேத்கா் சிலைகளை நிறுவுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹிந்தி திணிப்பு எதிா்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் நினைவாக சென்னையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.