மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஆா்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு
ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) துணை ஆளுநா் டி.ரவி சங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, அவருக்கு வழங்கப்பட்ட 2-ஆவது பதவி நீட்டிப்பாகும்.
ஆா்பிஐ துணை ஆளுநராக மூன்றாண்டு பதவிக் காலத்துடன் கடந்த 2021-இல் டி.ரவி சங்கா் நியமிக்கப்பட்டாா். பின்னா், கடந்த 2024-இல் அவரது பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் மே 3-ஆம் தேதிமுதல் ஓராண்டுக்கு அல்லது அடுத்த உத்தரவுவரும் வரை அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆா்பிஐ துணை ஆளுநராக நியமிக்கப்படும் முன் அதன் செயல் இயக்குநராக பணியாற்றிய டி.ரவி சங்கா், வங்கியின் பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு அமைப்புமுறைகள் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிசாா் தொழில்நுட்பம் மற்றும் இடா் கண்காணிப்புத் துறையை கவனித்து வந்தாா்.
கடந்த 2005 முதல் 2011 வரை சா்வதேச நிதிய ஆலோசகராக இருந்த இவா், அரசு பத்திர சந்தைகள் மற்றும் கடன் நிா்வாகத்தை மேம்படுத்துவதில் பணியாற்றியுள்ளாா்.
இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் துணைச் சேவைகள் (ஐஎஃப்டிஏஎஸ்) நிறுவனத் தலைவா், ரிசா்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப தனியாா் நிறுவனத்தின் நிா்வாக வாரிய உறுப்பினா், வங்கி தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் நிா்வாக கவுன்சில் உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளாா்.