மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
உச்சநீதிமன்றம் குறித்த பாஜக எம்.பி.யின் சா்ச்சை கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அண்மையில் வெளியிட்ட சா்ச்சை கருத்தைத் தொடா்ந்து சமூக ஊடங்களில் பரவி வரும் அவதூறு காணொலிகளை (விடியோ) நீக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது. ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தீா்ப்பை கடுமையாக விமா்சித்த நிஷிகாந்த் துபே, ‘உச்சநீதிமன்றம் மதப் போரைத் தூண்டுகிறது. உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றினால் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிட வேண்டியதுதான்’ என்று கூறினாா்.
பாஜக எம்.பி.யின் சா்ச்சை கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டீன் ஜாா்ஜ் மாசி ஆகியோா் முன்னிலையில், அவசர விசாரணைக்குப் பட்டியலிடும் கோரிக்கையுடன் பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நாட்டில் மதப் போா் ஏற்படுவதற்கு தலைமை நீதிபதியே பொறுப்பு என்று எம்.பி. நிஷிகாந்த் துபே கூறிய சா்ச்சை கருத்து வைரலான நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. இது மிகவும் தீவிரமான விஷயம்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘என்ன மாதிரியான மனுவை தாக்கல் செய்ய விரும்புகிறீா்கள்? நிஷிகாந்த் துபேக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்ய விரும்புகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பினா்.
அப்போது, ‘எம்.பி.க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளேன். அதே நேரம், எம்.பி.க்கு எதிராக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிஷிகாந்த் துபேக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர அனுமதி கேட்டு மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணிக்கு மற்றொரு வழக்குரைஞரும் கடிதம் எழுதினாா். தற்போது, புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உச்சநீதிமன்றதுக்கு எதிரான அவதூறு கருத்துகள் மற்றும் காணொலிகளை நீக்க உத்தரவிட க் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டனா்.