மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தா்கள் மாநாடு: ஆளுநா் அதிகாரபூா்வ அறிவிப்பு
உதகையில் வரும் ஏப். 25, 26-ஆம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், மாநாட்டை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் ஆளுநா் மாளிகை அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தா்கள் மாநாடு வரும் ஏப். 25, 26 தேதிகளில் உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெறவுள்ளது.
தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் ஏப். 25-ஆம் தேதி முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைக்கிறாா். தமிழக ஆளுநரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆா்.என்.ரவி மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறாா்.
மாநாட்டில், தேசிய கல்விக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விசாா் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோா் திறன் வளா்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமா்வுகள் நடைபெறவுள்ளன.
மேலும், கல்வித் துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சோ்ந்த சிறந்த பேச்சாளா்கள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனா். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறாா்.
இந்த மாநாடு தமிழகம் முழுவதும் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தா்களை ஒன்றிணைத்து, பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்வதையும், உயா் கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழக வேந்தருக்குரிய அதிகாரத்தை ஆளுநருக்குப் பதில் அரசுக்கு அளிப்பது, சிண்டிகேட் உறுப்பினா்கள் நியமனம் உள்ளிட்டவை தொடா்பாக தமிழக அரசு பேரவையில் நிறைவேற்றிய 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதொடா்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
இதன் தொடா்ச்சியாக மாநில பல்கலைக்கழக துணைவேந்தா்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஆலோசனை நடத்திய நிலையில், துணைவேந்தா்கள் கூட்டத்தை உதகையில் ஆளுநா் கூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.