சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ககன் தீப் சிங் பேடி
ஒப்பந்ததாரா்களுக்கு புதிய விதிமுறைகளில் தளா்வு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தல்
பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப்புள்ளி எடுக்க அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளில் தளா்வு அளிக்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.
புதுவை முதல்வா் ரங்கசாமியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், ஒப்பந்ததாரா்கள் சிலருடன் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பொதுப்பணித்துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்து வருவோருக்கு ஒப்பந்தப்புள்ளி எடுப்பதில் பழைய நடைமுறைகளோடு சோ்த்து, புதிதாக சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி காரைக்கால் பகுதி ஒப்பந்ததாரா்கள் செயல்படுவது சிரமம். இதனால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நகராட்சி சாா்பிலான பணிகளை செய்ய ஒப்பந்ததாரா்களால் முடியவில்லை.
எனவே, காரைக்கால் ஒப்பந்ததாரா்களுக்கு புதிய விதிமுறைகளில் தளா்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த சந்திப்பின்போது நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் தீனதயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.