செய்திகள் :

காதல் கசப்பா? இனிப்பா? ஸ்வீட் ஹார்ட் - திரை விமர்சனம்!

post image

நடிகர் ரியோ ராஜ் நடித்த ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் காதல் இனிப்பாகவும் அதற்கு இணையாக சலிப்பாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த தலைமுறைக்கு காதல் என்றாலே, ’என்றென்றும் நம் அன்பு நிலைத்திருக்கும்’ என்கிற வலுவான எண்ணங்கள் அதிகமாகவே இருந்தன. ஆனால், இப்போது பெரும்பான்மையான காதல்களில் அப்படி ஒருவருக்கு ஒருவர் காலம் முழுக்க அன்பு செலுத்திக்கொண்டிருப்பது முடியாத காரியம் எனப் பேசி பிரிவை நோக்கிச் செல்ல முடிவெடுக்கின்றனர்.

ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தில் நாயகன் அப்படித்தான் ஒரு முடிவை எடுக்கிறார். நாயகனான ரியோ ராஜுக்கு இளவயதிலேயே அவருடைய தாய், தன் தந்தையை, சகோதரியை, தன்னை விட்டுவிட்டு இன்னொருவருடன் சென்றுவிட்டார் என்கிற ஆதங்கம் உறுத்திக்கொண்டே இருக்கிறது. கடந்த காலம் இப்படியிருக்க, நாயகி எல்லாரும் உன் அம்மா மாதிரியே இருக்க மாட்டார்கள்; இறுதிவரை இணைந்து வாழும் தம்பதிகளும் இருக்கின்றனர் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காதலனை மாற்ற முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்.

ஆனால், நாயகனோ அப்படியெல்லாம் இருக்க முடியாது, ஒருவருக்கு ஒருவர் சலிப்பு வந்தே தீரும்; திருமணம், குடும்பம் என்பதே பெரிய சுமை என வசனங்களாகப் பேசி ஒருகட்டத்தில் காதலை முறிக்கிறார். நாயகி துரத்தித் துரத்தி நாயகனைத் தேடி வந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார். இறுதியாக, இருவருமே பிரிந்துவிடலாம் என்கிற மனநிலைக்கு வரும்போது ‘ஒரு சம்பவம்’ நடக்கிறது. அது என்ன சம்பவம்? உண்மையிலேயே உறவுகள் கசப்பனதா இல்லை இனிப்பானதா? காதலும் திருமணமும் வேண்டாம் என ஓடும் நாயகன் மனம் திருந்தினாரா? என்பதே ஸ்வீட் ஹார்ட் கதை.

சில குறைகளை நீக்கிப்பார்த்தால், தமிழ் சினிமாவிற்கு ஸ்வீட் ஹார்ட் நல்ல வரவாகவே இருக்கிறது. காரணம், இப்படம் உறவுகளைக் கைவிட்டு செல்பவர்களைத் தவறானர்களாக சித்திரிக்காமல், சென்றவர்களுக்கு உறவுகளில் ஏற்பட்ட கசப்புகளையும் காட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: 60 வயதில் புதிய காதலியை அறிமுகப்படுத்திய ஆமிர் கான்!

குறிப்பாக, ஆரம்ப காட்சிகளில் நாயகனின் அம்மா - அப்பா இருவருக்குமிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் காட்டப்படுகின்றன. அதற்குக் காரணம், நாயகனின் தந்தை தொடர்ந்து மது அருந்திக்கொண்டே இருப்பது. இப்படி, அனுதினமும் குடிகார கணவனின் அடிகளையும் பேச்சையும் சகித்துக்கொண்டு எத்தனை நாள் வாழ்வது? அந்தக் காட்சி நாயகனின் அம்மாவுக்கு ஆதரவாகவே எழுதப்பட்டுள்ளது. இதுபோல், படத்தின் இயக்குநர் ஸ்வீனித் எஸ். சுகுமார் பல இடங்களில் குடும்பங்களுக்குள் நிகழும் சண்டைகள் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை மிக கவனமாக எழுதியிருக்கிறார். காதல் வெறும் காமத்திற்கான தேவை மட்டுமல்ல அது மிக உணர்வுப்பூர்வமாக மாறும் இடமும் உண்டு என்பதை கதாபாத்திர வளர்ச்சியில் கொண்டுவந்ததும் நன்றாக இருந்தது.

இன்றைய இளைஞர்களுக்காகவே கதை எழுதப்பட்டுள்ளதால், நவீன காதல்களில் ஏற்படும் குழப்பங்கள், சிக்கல்கள், பிரிவின் எடை உறவின் எடையைவிட அதிகம் என்பதை மறைமுகமாகப் பேசியது என ஒரு அறிமுக இயக்குநராக ஸ்வீனித் எஸ். சுகுமார் கவனம் ஈர்க்கிறார். மிக முக்கியமாக, நாயகனின் பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாட நாயகி அழைத்து வரும் காட்சியில் நல்ல விஷயம் ஒன்று பேசப்பட்டிருக்கிறது. அதற்காகவே, இயக்குநருக்கு தனி பாராட்டுகள்.

தொகுப்பாளராக இருந்து நடிகராக வளர்ந்த ரியோ ராஜ், ஜோ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். அப்படத்தைத் தொடர்ந்து ஸ்வீட் ஹார்ட் படமும் அவருக்கு வெற்றியைத் தரும் என்றே தெரிகிறது. ’என் அம்மா இன்னொருத்தன்கூட போனதுக்கு ஆயிரம் நியாயமான காரணம் இருக்கலாம். ஆனால், போனதுக்கு அப்பறம் ஒருமுறைகூட என்னை வந்து பாக்காததற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது” என தன் கதாபாத்திரத்தின் குணங்களை இறுதிவரை கடத்தியது சிறப்பாக இருந்தது. ஆனால், இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாயகி கோபிகா ரமேஷுக்கு நிறைய காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. காதல், பிரிவு, ஏக்கம் என காட்சிக்கு தேவையான முகபாவனைகளையும் உடல்மொழிகளையும் அருமையாக வெளிப்படுத்தி கதையின் பலமாக மாறுகிறார். அதேபோல், துணை நடிகர்களான ரெஞ்சி பணிக்கர், அருணாச்சலேஸ்வரன், ஃபௌசி உள்ளிட்டோரும் கதையின் போக்கிற்கு சுவாரஸ்யமான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து துறைகளிலும் சரியான வேலையை வாங்கிய இயக்குநர் நான் லீனியர் கதை சொல்லல் முறையில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. முதல்பாதியில் திரைக்கதை கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் மாறிமாறி வருவதால் சில இடங்களில் தொடர்ச்சிகள் அறுபடுகின்றன.

இருப்பினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலேயே அக்குறைகள் இருப்பதால் கதையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அழுத்தமான காதல் கதையுடன் உணர்வுப்பூர்வமான மற்றொரு விஷயமும் இணைந்ததால் நல்ல படம் என்கிற எண்ணத்தையே ஸ்வீட் ஹார்ட் தருகிறது.

சித்தார்த்துக்கு சிறந்த படமாக அமையும்: நயன்தாரா படத்தைப் பாராட்டிய அஸ்வின்..!

தமிழக கிரிக்கெட்டர் அஸ்வின் டெஸ்ட் படத்தில் சித்தார்த்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி... மேலும் பார்க்க

தக் லைஃப் படக்குழுவின் ஹோலி வாழ்த்து!

தக் லைஃப் படக்குழுவினர் ஹோலி வாழ்த்துத் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்... மேலும் பார்க்க

எங்கள் மகளின் புகைப்படங்களை எடுக்காதீர்கள், மீறினால் சட்ட நடவடிக்கை: ரன்பீர் - ஆலியா பட்

பாலிவுட் தம்பதிகளான ஆலியா பட், ரன்பீர் தங்களது மகள் ராஹாவின் புகைப்படங்களை எடுக்க வேண்டாமெனக் கூறியுள்ளார்கள்.நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் இருவரும் பாலிவுட்டில் முன்னனி நடிகர், நடிகையாக இருக்... மேலும் பார்க்க

படப்பிடிப்பு அச்சுறுத்தலாக இருப்பினும் திருப்தி: ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் லவ் அன்ட் வார் படத்தின் வேலைகள் அச்சுறுத்தலாக இருப்பினும் திருப்தியாக இருந்ததாகக் கூறியுள்ளார். ரன்பீர் கபூர் 2007இல் தனது முதல் படமான சாவாரியாவில் நடித்தார். அதை இயக்கிய பிரபல பா... மேலும் பார்க்க

60 வயதில் புதிய காதலியை அறிமுகப்படுத்திய ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் தனது புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், இருவரும் ஒராண்டாக ஒன்றாக வாழ்வதாகக் கூறியுள்ளார். குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டுமென நடிகர் ஆமிர்கான் சமீக காலமாக ... மேலும் பார்க்க

பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் நாண்மதிய பெருமாள் கோயில் தீர்த்தவாரி!

பூம்புகார்: பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் நாண்மதிய பெருமாள் கோயில் தீர்த்தவாரி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.செம்பனார்கோவில் அருகே தலைச்சங்காட்டில் நாண்மதிய பெருமாள் கோயில் உள்ளது. இது 108 வைணவ த... மேலும் பார்க்க