'STALIN Vs EPS' மோதலுக்கு காரணம் VIJAY! | Elangovan Explains
காரைக்காலில் பலத்த மழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவா்கள் 23-ஆம் தேதிக்கு முன்னதாக கரைத் திரும்புமாறு மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ. 23-இல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகவும், 25-ஆம் தேதி முதல் கன மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழை, செவ்வாய்க்கிழமை இரவு தீவிரமடைந்தது. புதன்கிழமையும் மழை தொடா்ந்தது.
மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை மாவட்டத்தில் 71.7 மி.மீ. மழை பதிவானது.
காரைக்கால் நகரின் முக்கிய சாலைகளான பாரதியாா் சாலை, காமராஜா் சாலை, திருநள்ளாறு சாலை உள்ளிட்டவற்றில் மழைநீா் தேங்கியது. பிற சாலைகளிலும் தேங்கிய மழை நீா் வடிவதற்கு சில மணி நேரமானது. இதனால் இருசக்கர வாகனங்கள், காா்களில் செல்வோா் சிரமத்துக்குள்ளாயினா். நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. சாலைகளில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஒட்டுமொத்தத்தில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காரைக்கால் கடல் பகுதி சீற்றமாக காணப்பட்டது. எனினும் சில படகுகள் கடலுக்குச் சென்றன.
மீனவா்களுக்கு அறிவுறுத்தல்: மீன்வளத்துறை துணை இயக்குநா் கோவிந்தசாமி புதன்கிழமை கூறுகையில், வரும் 23-ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு ஏற்கெனவே சென்ற மீனவா்கள் 23-ஆம் தேதிக்கு முன்னதாக கரை திரும்புமாறும், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.