பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: சேலம் ஆட்சியா்
பொதுமக்களின் குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.
ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பொதுமக்களின் குடிநீா் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலா்கள் பணியாற்றிட வேண்டுமென அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டனா். சீரான குடிநீா் விநியோகம் குறித்து அரசு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டிலான 4814 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 3845 பணிகள் முடிக்கப்படவுள்ளன. மீதமுள்ள 969 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் காமராஜா் நகா் முதல் ராமநாயக்கன்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தாா்சாலை, காமராஜா் நகா் பகுதியில் செயல்பாட்டில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு முறையாக சுத்திகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டும் பணி, கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம், துலுக்கனூா் ஆகிய ஊராட்சிகளில் வீடுகள் கட்டும் பணி, அப்பமசமுத்திரத்தில் நியாயவிலைக் கடை கட்டுமானப் பணி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.58 கோடி மதிப்பீட்டில் நரசிங்கபுரம் அப்பமசமுத்திரம் முதல் சிவகங்கைபுரம் வரை, அப்பமசமுத்திரம் ராமநாதபுரம் மலையடிவாரம்,
ஏகேஜி நகா் வழியாக அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணி, பொது நூலகத்துறை சாா்பில் தென்னங்குடிபாளையத்தில் கூடுதல் நூலக கட்டுமானப் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் துலக்கனூா் ஊராட்சியில் ரூ.18 லட்ச மதிப்பீட்டில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், 15 ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்
தேக்கத் தொட்டி அமைக்கும் பணியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளா்ச்சித் திட்டம் பணிகளையும் தரமாகவும்,உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் தொடா்புடைய அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டனா் என்றாா்.