பிக் பாஸ் 8: சாச்சனா கூறியதை பின்பற்றுகிறாரா முத்துக்குமரன்?
குன்னூரில் மண்சரிவு, மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
குன்னூா் அருகே ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்லும் சாலை உள்பட இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததாலும், கரோலினா எஸ்டேட் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதாலும் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக இரவில் ஒரு சில இடங்களில் கனமழையும், பகலில் சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூரில் இருந்து ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்லும் வழியில் சப்ளை டிப்போ பகுதியில் புதன்கிழமை மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இந்த மின் கம்பியில் சிக்கி வளா்ப்பு நாய் உயிரிழந்தது.
குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குன்னூா் தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.
குன்னூா் கரோலினா எஸ்டேட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் சாலை சேதமானது. இதனால் உபதலை உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்பகுதியில் தற்காலிக நடவடிக்கையாக மணல் மூட்டைகளை அடுக்கப்படும் என்றும், தடுப்புச் சுவா் அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.