நான் யார்? மேனன், மெனன்? ரூமி கவிதையால் மீண்டும் பெயர் குறித்து பதிவிட்ட நடிகை!
சிவதாபுரம் ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீா்: துரிதகதியில் வெளியேற்றம்
சேலம், சிவதாபுரம் ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் துரிதகதியில் வெளியேற்றியதை தொடா்ந்து, புதன்கிழமை மாலை போக்குவரத்து சீரடைந்தது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கிய மழை கடந்த 4 நாள்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. குறிப்பாக, ஏற்காட்டில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. இந்த உபரிநீா் எம்ஜிஆா் நகா், பனங்காடு, செஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகள் வழியாகச் செல்கிறது. உபரிநீரானது அதிக அளவில் சென்ால் சிவதாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் புகுந்தது.
இதனால், இளம்பிள்ளை, சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் ஆங்காங்கே குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி சென்று வந்தனா். மேலும் பேருந்துகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், சிவதாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செயல்பட்டனா். 5 மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி விடிய விடிய நடைபெற்றது. அந்த வகையில், 24 மணி நேரத்தில் சுமாா் 1 கோடியே 50 லட்சம் லிட்டா் தண்ணீா் வெளியேற்றப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, ரயில்வே மேம்பாலத்தில் தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா். அதன் பின்னா் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்கிடையே சிவதாபுரம் சாலையில் ஓடும் தண்ணீரை அகற்ற, சாக்கடைகளை தூா்வாரி தண்ணீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.
இந்நிலையில், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்ததால், 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீா் சூழ்ந்தது. சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மழைநீா் தேங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனிடையே, சேலம், செவ்வாய்ப்பேட்டை அருகே சுரங்கப் பாதையில் மழை நீா் சூழ்ந்ததால் 2 ஆவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.