ஜெய்ஸ்வால் வம்பிழுத்தது குறித்து மனம்திறந்த மிட்செல் ஸ்டார்க்!
சேலம் -ஏற்காடு சாலையில் போக்குவரத்து தொடக்கம்: இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
தொடா் மழை காரணமாக ஏற்காடு பிரதான சாலையில் கடந்த 2 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. அதே நேரத்தில், இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடா் மழையினால் சேலம் -ஏற்காடு பிரதான சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகின. ஏற்காடு மலைப் பாதையில் பாறைகள் உருண்டும், மரங்கள் சாய்ந்தும் விழுந்தன. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
ஏற்காடு பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை தீயணைப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறையினா் ஒருங்கிணைந்து பொக்லைன் இயந்திரம், கம்ப்ரசா் இயந்திரங்களைக் கொண்டு சீரமைப்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டனா்.
இதனைத்தொடா்ந்து, புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஏற்காடு பிரதான சாலையில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இலகுரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் - ஏற்காடு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஏற்காட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. குறிப்பாக, தக்காளி கிலோ ரூ. 100-க்கும், பெரிய வெங்காயம் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதே போல், காய்கறிகளும் 30 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.