ஜிம்பாப்வே டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
புலாவயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே, ஒருநாள் தொடரை 2-1 எனவும் அதே அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த டி20 ஆட்டத்தில் முதலில் ஜிம்பாப்வே 12.4 ஓவா்களில் 57 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அடுத்து பாகிஸ்தான் 5.3 ஓவா்களிலேயே விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சோ்த்து வென்றது. அதன் பௌலா் சூஃபியான் முகீம் ஆட்டநாயகன் ஆனாா்.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே, பேட் செய்யத் தீா்மானித்தது. அந்த அணியின் பிரயன் பென்னெட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, தடிவனாஷி மருமானி 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். டயன் மையா்ஸ் 3, கேப்டன் சிகந்தா் ராஸா 3, ரயான் பா்ல் 1 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
கிளைவ் மடாண்டே 9, தஷிங்கா முசெகிவா 0, வெலிங்டன் மசாகட்ஸா 3, ரிச்சா்டு கராவா 0, பிளெஸ்ஸிங் முஸாரபானி 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கடைசி வீரராக டிரெவா் கவாண்டு 1 ரன்னுடன் களத்திலிருந்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் சூஃபியான் முகீம் 3 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
அப்பாஸ் அஃப்ரிதி 2, அப்ராா் அகமது, ஹாரிஸ் ரௌஃப், சல்மான் அகா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 58 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், ஒமைா் யூசுஃப் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, சயிம் அயுப் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.