Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஆப்கான் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை தாலிபான் தரப்பும் மறுத்துள்ளது. பெண் பத்திரிகையாளர்களை வேண்டுமென்றே ஒதுக்கவில்லை என்றும், இது கவனக்குறைவாக நடந்த செயல் என்றும் தாலிபான் அரசியல் அலுவலகத்தின் தலைவர் சுஹைல் ஷஹீன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுஹைல் ஷஹீன் பேசுகையில், "பெண் பத்திரிகையாளர்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. இது திட்டமிடாமல் கவனக்குறைவாக நடந்தது. ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர்கள் ஊடகங்களில் வருகிறார்கள். அமைச்சர் முட்டாக்கி காபூலில் உள்ள தனது அலுவலகத்தில் பெண் பத்திரிகையாளர்களையும், பிரதிநிதிகளையும் தவறாமல் சந்திக்கிறார். அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமை குறித்து விளக்கம் அளித்தார். “ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அதற்கு தடையும் விதிக்கப்படவில்லை. தற்போது நாடு முழுவதும் 1 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்களில் 28 லட்சம் பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆவர். சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பெண்களின் கல்வி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.