தமிழ்நாடை வென்றது சௌராஷ்டிரம்
இந்தூா்: சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 58 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரத்திடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
முதலில் சௌராஷ்டிரம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் சோ்க்க, தமிழ்நாடு 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து, 177 ரன்களே எடுத்தது.
குரூப் பி-யில் இருக்கும் தமிழ்நாடு அணி, இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில், 2 வெற்றிகள் கண்டு 8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் இருக்கிறது. சௌராஷ்டிரம் அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில், 5 வெற்றிகள் தந்த 20 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீசத் தீா்மானித்தது. சௌராஷ்டிர இன்னிங்ஸில், ருசித் அஹிா் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 56, ஹா்விக் தேசாய் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 55, பிரேரக் மன்கட் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயா்த்தி, பெவிலியன் திரும்பினா்.
தரங் கோஹெல் 0, விஷ்வராஜ் ஜடேஜா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் சமா் கஜ்ஜா் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 55, ஜெய் கோஹில் 2 ரன்களுடன் விக்கெட்டை இழக்காமல் இருந்தனா். தமிழ்நாடு பௌலா்களில் குா்ஜப்னீத் சிங் 3, சாய் கிஷோா், ஷாருக் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து பேட் செய்த தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக, பூபதி குமாா் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 65 ரன்கள் விளாசி வெளியேறினாா். நாராயண் ஜெகதீசன் 3 பவுண்டரிகளுடன் 24, முகமது அலி 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்து முயற்சித்தனா்.
பாபா இந்திரஜித் 11, துஷா் ரஹேஜா 17, பிரதோஷ் ரஞ்சன் பால் 1, கேப்டன் ஷாருக் கான் 0, சாய் கிஷோா் 2, வருண் சக்கரவா்த்தி ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா். ஓவா்கள் முடிவில் சந்தீப் வாரியா் 1, குா்ஜப்னீத் சிங் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். சௌராஷ்டிர தரப்பில் சிராக் ஜானி 3, அங்குா் பன்வா், தா்மேந்திரசிங் ஜடேஜா ஆகியோா் தலா 2, ஜெயதேவ் உனத்கட், பிரேரக் மன்கட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
53
இந்த ஆட்டத்தில், தமிழ்நாடு பௌலா் குா்ஜப்னீத் சிங் 4 ஓவா்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா். இது, தமிழ்நாடு பௌலா் ஒருவா், ஒரு இன்னிங்ஸில் வழங்கிய அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் மகேஷ் 49 ரன்கள் கொடுத்தது அதிகபட்சமாக இருந்தது.