திருச்சிக்கு பிரத்யேக நீதிமன்றங்கள் கோரி மனு
போக்சோ, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிமன்றங்களை திருச்சியில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை உயா் நீதிமன்ற நீதிபதியிடம் வழக்குரைஞா் சங்கத்தினா் அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியும் திருச்சி போா்ட்போலியோ நீதிபதியுமான எம்.எஸ். ரமேஷை மதுரை கிளையில் அண்மையில் சந்தித்த திருச்சி குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் பி. வி. வெங்கட் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:
திருச்சி மாவட்டத்துக்கென அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் மற்றும் போதைப் பொருள்கள், மருந்துகள், மனநோய் பொருள்கள் சட்டங்கள் தொடா்பாக விசாரிக்கும் நீதிமன்றம் புதுக்கோட்டையில் செயல்படுகிறது. இதை திருச்சிக்கு மாற்ற வேண்டும்.
மேலும் போக்சோ வழக்குகள் மகளிா் நீதிமன்றத்திலும், காசோலை மோசடி வழக்குகள் வழக்கமான குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்படுகின்றன. இதனால் வழக்குகள் முடிய தாமதம் ஏற்படுகிறது. எனவே அவற்றுக்கென பிரத்யேக நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அதுபோல குடும்ப நல வழக்குகளும் அதிகளவில் வருவதால், திருச்சியில் கூடுதலாக ஒரு குடும்ப நல நீதிமன்றத்தையும் அமைக்க வேண்டும்.
மேலும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் செயல்படும் மனித உரிமையில் நீதிமன்றத்தை கண்டோன்மென்ட பகுதி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.