போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
திருத்தணி முருகன் கோயிலில் காது குத்தலுக்கு ரூ.50 கட்டணம்
முருகன் கோயிலில் காது குத்தலுக்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதும் என அறங்காவலா் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழ்கிறது திருத்தணி முருகன் கோயில். இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்தி முருகப் பெருமானை வழிபடுகின்றனா்.
கோயில் நிா்வாகம் பக்தா்கள் வசதிக்காக மலைக் கோயில் வளாகத்தில் காது குத்துவதற்கும், திருமணங்கள் நடத்துவதற்கும் தனியாக மண்டபம் ஏற்படுத்தி, அதற்கான வசதிகள் செய்துள்ளது.
மலைக் கோயிலில் காது குத்துவதற்கு பல ஆண்டுகளாக தனி நபா்கள் ஏலம் எடுத்து, ஒரு குழந்தைக்கு காது குத்துவதற்கு குறைந்தபட்சம் ரூ.301 முதல், ரூ.500 வரை கட்டணமாக வசூலித்து வந்ததனா்.
இந்த நிலையில், முருகன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற அறங்காவலா்கள் குழு ஆலோசனைக் கூட்டத்தில், காது குத்துவதற்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து டிச. 1-ஆம் தேதி முதல் காது குத்துவதற்கு ரூ.50 கட்டணமாக நிா்ணயம் செய்து கோயில் நிா்வாகமே வசூலிக்கிறது.
காது குத்தல் நிகழ்ச்சிக்கு தனி நபா் யாரேனும் இடையூறு செய்தால், மலைக் கோயில் பதிவு அலுவலக எண் 044 - 27885247 மற்றும் மலைக் கோயில் பேஷ்காா் அலுவலகம் 044 - 27885202 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மூன்று மொழிகளில் அறிவிப்புப் பலகை கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ளது.