செய்திகள் :

நான் காணாமல் போன கதை! - திக் திக் பால்ய நினைவுகள் | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்கும் போது அப்பாவின் வண்டிச் சத்தம் சீக்கிரமே கேட்கிறதே என்று மெல்ல ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அப்பா உள்ளே வந்ததும் தீடீர்னு 'மெயின்கார்டுகேட் போலாமா கலர் டிவி வாங்க' என்றார்கள். ஹோம் வொர்க்கை அப்படியே மூடிவைத்து விட்டு வேகமாகப் புறப்பட்டு பஸ்ஸில் கிளம்பினோம்.

அன்று 1992 ஆகஸ்ட் 3... ஆடிப்பெருக்கு விழா. திருச்சியில் எப்போதும் ஆடிப்பெருக்கு சமயத்தில் கடுமையான கூட்ட நெரிசலாக இருக்கும். பாதி வழியிலேயே பஸ்ஸில் கூட்டம் நிரம்பியது. நான் எங்கள் வீட்டருகே இருக்கும் ஓர் அண்ணனோடு நடுப்பகுதியில் அமர்ந்து வந்தேன். அவனோ பாதி வழியில் இறங்கி விட்டான். நானோ தனியாக மாட்டிக்கொண்டேன்.

சித்தரிப்பு படம்

அப்பா பின்பக்கம் கடைசியாக நின்று கொண்டு வந்தார்கள். நான் அம்மாவோடு இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள். என் தங்கை மூன்று வயது குழந்தை என்பதால் அம்மா முன்பகுதியில் அமர்ந்து வந்தார்கள்.

நாங்கள் மெயின்கார்டுகேட் தெப்பக்குளம் பஸ்ஸ்டாப்பில் இறங்குவது வழக்கம். அன்றும் அதுபோல  இறங்கினேன். இறங்கியதும் எனது கண்கள் அம்மாவின் நீல நிறப் புடவையைத் தேடியது.

படபடப்போடு சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன் அப்பா, அம்மா, தங்கை யாரையும் காணவில்லை. பயத்திலும் பதற்றத்திலும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அழுகையை அடக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தேன். பயத்தில் லேசாக மூச்சிரைத்தது.

தெப்பக்குளம் பஸ்ஸ்டாப்பிலிருந்து புனித லூர்து அன்னை ஆலயம் வரை நடந்தேன். சர்ச் வாசலில் ஜெகஜெகவென்று ஜனங்கள் நடந்து செல்லுகிறார்கள். நான் மட்டும் தனியாக நிற்பதை மூன்று பெண்களும் ஒரு வயதான பாட்டியும் என்னைக் கவனித்தார்கள். 'ஏன் தனியாக இருக்க பாப்பா' என்று கேட்டார்கள். இப்போதும் அழுகையை அடக்கிக்கொண்டே  அவர்களிடம் உண்மையைக் கூறினேன்.

அவர்கள் அன்னை ஆலயத்துக்கு ஜெபத்துக்காக வந்தவர்கள்... எனக்கு உதவுவதற்காக தங்கள் திட்டத்தைப் மாற்றிக் கொண்டார்கள். கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. ‘என்ன‌ கிளாஸ் படிக்கற பாப்பா’ என்று கேட்டார்கள். பின் வீட்டு முகவரியை கேட்டார்கள். ‘நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன், பொன்மலைப்பட்டியிலிருந்து பஸ்ஸில் வந்தோம்’ என வீட்டு முகவரியைச் சொன்னேன்.

சித்தரிப்பு படம்

அவர்களில் ஓர் ஆன்ட்டி தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டு வரும் வரை, நான் மற்ற இருவரோடு அங்கு உட்கார்ந்திருந்தேன். அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்றதை என்னிடம் அவர்கள் சொல்லவில்லை. கனமழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. எனக்கோ நேரமாக நேரமாக பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது..

அப்போது மனசு கண்டபடி எல்லாம் கற்பனை செய்கிறது. தூர்தஷன் டிவியில் வருகிற ‘காணாமல் போனவர்கள்’ அறிவிப்பில் ‘முத்துலெட்சுமி வயது 7’ என்ற ஒளிபரப்பைப் பார்த்த பிறகுதான் அப்பாவும் அம்மாவும் நம்மைத் தேடி வருவார்களோ என்று நீண்டது.

பிறகு மழையில் நனைந்தவண்ணம்  நடந்தோம் நடந்தோம்... அடிக்கடி பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்து எங்காவது அப்பா அம்மா தெரிகிறார்களா என்று  அழுதுகொண்டே நடந்தேன். பஸ்ஸ்டாப்பில் நிற்கும்போது எங்கள் வீட்டுக்குச் செல்லும் 15, 16 , 32 என  மூன்று பேருந்துகள் வரிசையாகச் சென்றன.

அவர்களிடம் 'அந்த பஸ்ஸில ஏற்றி விடுங்க ப்ளீஸ்' என்று  அழுதேன். அவர்கள், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை... இன்னைக்கு எங்க வீட்டுக்குப் போலாம். நாளைக்குக் கண்டிப்பா உங்க வீட்டுக்குப் போயிடலாம்’ என்றதும் பயம் இன்னும் அதிகமானது. ஓர் ஆன்ட்டி மட்டும் என் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டே நடந்து வந்தார்கள். என்னால் அந்தக் காட்சியை இன்றும் மறக்கமுடியவில்லை.

சித்தரிப்பு படம்

கொட்டிய மழையில் சாலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்  ஓடுகிறது. பொன்மலைப்பட்டி செல்லும் பேருந்துகள் என்னைக் கடந்து செல்லும்போது, ‘என்னை அழகா அதில ஏத்தி விட்டா நான் வீட்டுக்கு போய்ருவேனே.‌  இந்த மூணு பேரும் என்னை ஏற்றிவிடாம இருக்காங்க’ என்று மீண்டும் அழுகை வந்தது. பின் அவர்கள் இடத்துக்குச் செல்லும் 128-ம் எண் பேருந்தில் ஏறினோம்.

வெளியே கடும் போக்குவரத்து நெரிசல்... பேருந்திலும் கடும் கூட்ட நெரிசல். செல்லும் வழியெங்கும் எனது கண்கள் எங்காவது அப்பா தெரிய மாட்டார்களா என்று ஏங்கியது. நேரம் 10:30 மணியைத் தாண்டியது. ஒரு வழியாக அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். ‘புன்னகை மன்னன்’ படத்தில் வரும் சிறுவன் போல அழுது அடம்பிடிக்க தெரியவில்லை. ஆனால், மனதில் அப்படி ஒரு பயம். அவர்களின் ஓலைக் குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஒற்றை அறை வீட்டுக்குள் நான் உட்கார்ந்திருந்தேன். 'பயப்படாதே பாப்பா...' என்றார்கள். பிறகு ஈரமாக இருந்த தலையைத் துவர்த்தி விட்டார்கள். வரும் வழியில் இட்லி பார்சல் வாங்கி வந்திருந்தார்கள். சாப்பிடச் சொன்னார்கள். ‘மாட்டேன் மாட்டேன்’ என்று சொல்லிப் பார்த்தேன். ஸ்கூல்ல இருந்து வந்ததும் ஒரு டம்ளர் பூஸ்ட் குடித்ததுதான். ஆனாலும், பசியுமில்லை. பின் எப்படியோ சாப்பிட வைத்தார்கள். ‘இன்னைக்கு ஒரு நாள்தான்... நாளைக்கு வீட்டுக்குக் கண்டிப்பா போயிடலாம்’ என்றார்கள். நேரம் கிட்டத்தட்ட இரவு 11.30 மணியைத் தாண்டியிருக்கும். ஒரு துளிகூட தூக்கம் வரவில்லை.

சில மணி நேரத்துக்குப் பின் வாசலில் ஒரு சத்தம் கேட்டது. அந்த ஆன்ட்டி மெதுவாகக் கதவைத் திறந்தார்கள். அப்பாவின் கனமான குரல் லேசாகக் கேட்டது. வேகமாக எழுந்தேன். பின் அப்பாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். அப்போதும் அழுகையை அடக்கிக் கொண்டு புன்னகைத்தேன். அந்த ஆன்ட்டிக்கும் சந்தோஷமாக இருந்தது. வெளியே மழை பெய்து குளிராக இருந்ததால் ஒரு கனமான துண்டை என் தோளில் போட்டு விட்டார்கள். பின் அப்பாவின் சைக்கிளில் அமர வைத்ததும், ‘பத்திரமா இருந்துக்கோ’ என்று சொல்லி அனுப்பினார்கள்.

சித்தரிப்பு படம்

அப்பா திட்டுவார்களோ என்கிற பயத்தில் சைக்கிளில் வரும்போது ஒரு வார்த்தை கூட நான் பேசாமல் வந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சைக்கிள் பயணம். மெதுவாக அப்பாவிடம் 'சாரிப்பா நான் தெரியாம... பஸ்ஸில நீங்க இறங்கும்போது நான் பார்க்கலை' என்றேன்.... ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை... இப்போ பொன்மலை வந்தபிறகு நீதான் 'நம்ம வீட்டுக்கு எப்படி போகணும்னு ரூட் சொல்லிட்டே வரணும்... நான் ஓட்டிட்டு வரேன்' சரியா’ என்றார்கள்.

‘ம்ம் சரிப்பா’  என்று சொல்லிவிட்டு நடு இரவில் தவளைகளின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். 2 மணி தாண்டிவிட்டது.  

ஜன்னலோரத்தில் அம்மா கண்களில் மளமளவென்று நீர் இறங்கக் காத்திருந்தார்கள். தங்கையும் அன்று தூங்கவில்லை. என்னைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வந்தாள். அப்பா உள்ளே வந்ததும் ஏதும் பேசாமல், ‘எல்லாரும் தூங்குங்க’ என்றார்கள். அம்மா எனது நெற்றியில் திருநீறு பூசி விட்டு படுக்க வைத்தார்கள்.

மறுநாள் காலை 7 மணியைத் தாண்டியும் நான் எழவில்லை. ‘இன்னைக்கு ஒரு நாள் ஸ்கூல் வேண்டாம்’ என்றார்கள். அம்மா ‘நேத்து என்ன நடந்தது’ என்று கேட்க ஆரம்பிக்கும்போது பாதி ஷேவிங் முகத்தில் இருந்த அப்பா 'என் பாப்பு நம் வீட்டு முகவரியைத் தெளிவாக ஒண்ணுவிடாமச் சொல்லிட்டா தெரியுமா?' என்றார்கள்.

‘அப்பாக்கு அப்போ நம்ம மேல கோபம் இல்லை’யென்று மகிழ்ச்சியாக இருந்தது.

பிறகுதான் என்னவெல்லாம் நடந்தது என்று பேசினோம். அன்று நான் அம்மாவோடு  அமர்ந்துள்ளேன் என்று அப்பா நினைத்துக் கொண்டார்கள்.

டிவி கடைக்குச் செல்வதற்காக வழக்கமாக இறங்கும் தெப்பக்குளம் ஸ்டாப்பில் இறங்காமல் அதற்கு முந்தைய சிங்காரத்தோப்பு ஸ்டாப்பில் இறங்கி விட்டார்கள். அவர்களும் இறங்கிய நொடியிலிருந்து தேடித்தேடி அலைந்துவிட்டு,  மழை விடாமல் பெய்ததால் அம்மாவையும் தங்கையையும் வீட்டுக்கு பஸ் ஏற்றி விட்டு மீண்டும் மெயின்கார்டுகேட்டுக்கு வந்து தனியாகத் தேட ஆரம்பித்தார்கள். பிறகுதான் போலீஸ் ஸ்டேஷன் சென்று விசாரித்ததும் அந்த வீட்டின் முகவரி அப்பாவுக்கு கிடைத்தது.

சித்தரிப்பு படம்

பிறகு மீண்டும் பொன்மலைப்பட்டி சென்று வீட்டிலிருந்து டிவிஎஸ் 50 எடுத்துக் கிளம்ப... கடும் மழையில் வண்டி நனைந்ததால் ஸ்டார்ட் ஆகவில்லை. பிறகு சைக்கிளை எடுத்து புறப்பட்டு வந்திருக்கிறார்கள்.

இரண்டு நாள்களுக்குப் பின் அவர்கள் வீட்டுக்கு அந்தத் துண்டைக் கொடுக்கச் சென்றோம். ‘உங்க பாப்பா தைரியமான புள்ள’ என்றார்கள். தினமும் காலையில் ஸ்கூலுக்குக் கிளம்பும் போதெல்லாம் வீட்டு வாசலில் எழுதியிருக்கும் GOC-C-903/H New Diesel Colony என்று மனப்பாடம் செய்து கொள்வேன். ஒரு வேளை இந்த நிகழ்ச்சிக்காகத்தான் மனப்பாடம் செய்தேனோ என்று தோன்றும்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின் ரயில் எண்கள், முக்கியமான  லோகோக்கள், ரயில்வே ஸ்டேஷன் கோட், பஸ் ஸ்டாப் பெயர்கள் போன்ற விஷயங்களை மனத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

என்னுடைய ரஃப் நோட்டில் அதிக பக்கங்களில் பாரத் பெட்ரோல் லோகோ, தூர்தர்ஷன் தொலைக்காட்சி சின்னம், ரயில்வே லோகோ, சிவப்பு வண்ணத்தில் தீரன் சின்னமலை பஸ்கள், மெயின்கார்டுகேட் ஆர்ச் என்று வரைந்திருப்பேன்.

இப்போதும் திருச்சியின் அடையாளமாகத் திகழும் மெயின்கார்டுகேட் ஆர்ச்சை பார்க்கும் போது அன்று காணாமல் போன சம்பவம் நினைவில் வந்துவிடும்.

அன்று நான் அழுது கொண்டிருக்கும் போது, அந்த வயதான பாட்டி, ‘நாம் இன்னொரு நாள் ஜெபத்துக்குப் போகலாம்’ என்று முடிவெடுத்து என்னைப் பத்திரமாக அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றதை நினைக்கும்போது... கல்லுக்குள் ஈரமிருப்பதைப் போல ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானம் என்றும் காணாமல் போகாது என்று தோன்றுகிறது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையைக் கண்முன் நிறுத்திய கண்காட்சி - ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்

பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழைய காலத்து பொருட்கள்பழ... மேலும் பார்க்க