பட்ஜெட்: தமிழகத்தில் 9 புதிய தொழிற்பேட்டைகள்! எந்தெந்த பகுதிகள்?
அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு.
ரூ. 50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் தொடங்கப்படும்
விண்வெளித் தொழில்நுட்பத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
இதையும் படிக்க | மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
ரூ. 366 கோடியில் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் - திருமுடிவாக்கம், விழுப்புரம் - சாரம், நாயக்கனூர், கரூர் - நாகம்பள்ளி, திருச்சி - சூரியூர், மதுரை - கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் - தனிச்சியம், தஞ்சாவூர் - நடுவூர், திருநெல்வேலி - நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக 17,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலமாக 5,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ரூ. 250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா அமைப்பதன் மூலமாக 20,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.
இதையும் படிக்க | பட்ஜெட்: சென்னை வேளச்சேரியில் 3 கிமீ தூரத்துக்கு புதிய மேம்பாலம்!