"பாஜக கூட்டணி ஆட்சியில் மகளிருக்கு ரூ. 2500 உரிமைத் தொகை; மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளி - அண்ணாமலை
தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசைக் கண்டித்து 'தீய சக்திகளை வேரறுப்போம்' எனும் தலைப்பில் புளியங்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில், "இன்று மும்மொழி கொள்கையை எதிர்க்கும் தி.மு.க.காரர்களின் பிள்ளைகள் அனைவருமே பிற மொழிகளையும் படித்து வருகிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மகன் கூட பிரஞ்சு மொழியைப் படிக்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும். உயர்தரமிக்க தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களுக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதோ அந்த கல்வியை அதே தரத்தில் வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெயரில் 'ஜவகர் நவோதயா பள்ளி' திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின்படி உத்தரப்பிரதேசத்தில் 96 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதுபோல கர்நாடகத்தில் 31 பள்ளிகள், குஜராத்தில் 34, ஹரியானாவில் 21, கேரளாவில் 14 பள்ளிகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு பள்ளிக்கூட இல்லை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள நவோதயா பள்ளிகளில் 48 ஆயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள். நவோதயா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா 85 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு செலவிடுகிறது. இப்படிப்பட்ட நவோதயா பள்ளிகள் வேண்டாம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வேண்டாம் என இவர்கள் கூறுகிறார்கள். அரசுப் பள்ளிகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

ஆள்பவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம், இந்தி எதுவும் தெரியாது. இவர்கள் படிப்பறிவையும் கற்றுத் தர மாட்டார்கள், படிப்பறிவினைக் கற்றுத்தரும் அம்சத்தையும் அனுமதிக்கமாட்டார்கள். பிறகெப்படி தமிழகம் கல்வித் தரத்தில் முன்னேறும். ஆகவே, தமிழக ஏழை குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் பாரதி ஜனதா கட்சி கையெழுத்து இயக்கத்தைக் கையிலெடுத்திருக்கிறது.
இதற்கு ஒரு கோடி கையெழுத்து வேண்டும். அந்த இலக்கை எட்டியவுடன், ஜனாதிபதியைச் சந்தித்து தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களாகத் தேசிய கல்விக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை வேண்டும் எனக் கையெழுத்து அறிக்கையை ஒப்படைப்போம். ஆகவே தி.மு.க.காரர்கள் என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். மோடி இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள் எனக் கூறலாம்.
தேசியக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழகத்தில் உரிமையை பா.ஜ.க. விட்டுக்கொடுத்துவிடும் என ஒரு பொய்யைச் சொல்லி தி.மு.க.காரர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று எதைச் சொன்னாலும் மகளிருக்கு உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் தருகின்றோம் என தி.மு.க.வினர் பெருமை பீத்திக்கொள்கிறார்கள். இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள ஐந்து மாநிலங்களிலும்தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஒரு மாவட்டத்துக்கு 2 நவோதயா பள்ளிகளைக் காமராஜர் பள்ளி என்ற பெயரில் கொண்டு வருவோம். மகளிர் உரிமை தொகையாக 2,500-க்கும் மேல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புளியங்குடி எலுமிச்சைக்குப் புவிசார் குறியீடு வழங்குவதற்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
