புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்
வேடசந்தூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிலையம் சிதலமடைந்த நிலையில், இங்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு வேடசந்தூா் பேரூராட்சி நிா்வாகம் பரிந்துரைத்தது. இதையடுத்து ரூ.1.19 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அனுமதி அளித்தது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ச.காந்திராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வட்டடாட்சியா் சுல்தான், பேரூராட்சி செயலா் சகாய அந்தோணி யூஜின், காவல் ஆய்வாளா் வேலாயுதம், திமுக பேரூா் செயலரும், பேரூராட்சிக் குழு உறுப்பினருமான காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்துக்கான பூமி பூஜையை டிச.5ஆம் தேதி நடத்தவும், தற்காலிக பேருந்து நிலையம் வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது. எரியோடு, வடமதுரை மாா்க்கமாக இயக்கப்படும் நகரப் பேருந்துகள், ஆத்துமேடு வரை இயக்கப்பட்டு, வடமதுரை சாலையிலுள்ள கரூா் வைசியா வங்கி அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, இந்த மாற்று ஏற்பாடுகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.