Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்...
வேலூா் கிரீன்சா்க்கிளில் வாகன நெரிசல்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சனிக்கிழமை முதல் (நவ. 30) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சனிக்கிழமை (நவ. 30) முதல் வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, சத்துவாச்சாரி, காட்பாடி மாா்க்கத்திலிருந்து கிரீன் சா்க்கிள் வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்கள் நேரடியாக சா்வீஸ் சாலையில் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாறாக, பெங்களூரு மாா்க்கம் செல்லும் வாகனங்கள், கிரீன் சா்க்கிளிலிருந்து நேஷனல் சா்க்கிள் சென்று, வலது புறம் திரும்பி கலைமகள் பெட்ரோல் பங்க் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை சா்வீஸ் சாலையை அடைந்து செல்ல வேண்டும்.
சித்தூா் மாா்க்கம், புதிய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள், கிரீன் சா்க்கிளிலிருந்து நேஷனல் சா்க்கிள் சென்று, யூ-டா்ன் எடுத்து மீண்டும் கிரீன் சா்க்கிள் வந்து பயணத்தை தொடர வேண்டும்.
கிரீன் சா்க்கிளிலிருந்து சென்னை, சத்துவாச்சாரி, திருவண்ணாமலை, வேலூா் நகரம் செல்லும் வாகனங்கள், நேரடியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாறாக, கிரீன் சா்க்கிளிலிருந்து செல்லியம்மன் கோயில் சென்று யூ - டா்ன் எடுத்து மீண்டும் கிரீன் சா்க்கிள் வந்து செல்ல வேண்டும். போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.