சேலம்: அமைச்சர் தொடங்கி வைத்த புத்தகத் திருவிழாவை புறக்கணித்ததா காவல்துறை? - சர்ச்சையும் விளக்கமும்!
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழக முதல்வரின் ஆலோசனைக்கிணங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சேலத்தில் புத்தகத் திருவிழா என்பது சென்னை, ஈரோடு புத்தகத் திருவிழா வரிசையில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. குறுகிய நாள்கள் மட்டுமே நடக்கக்கூடிய இந்த புத்தகத் திருவிழாவில் சேலம் மட்டுமல்லாது... மற்ற மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள், மாணவர்கள் என அனைவரும் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் புத்தகத் திருவிழாவானது நேற்று தொடங்கப்பட்டது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் பங்கு பெற்றனர்.
ஆனால், காவல்துறை தரப்பில் மாநகர அதிகாரிகள் (ஆணையர் மற்றும் துணை ஆணையர்) மற்றும் மாவட்ட காவல்துறை (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்) அளவிலான அதிகாரிகள் யாரும் இதில் பங்கு பெறவில்லை என்பது பேசுபொருளாகியிருக்கிறது.
இது குறித்து பேசும் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர், "இதுவரை நடைபெற்ற அனைத்து புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளிலும் காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு நிச்சயமாக பங்கு பெறுவார்கள். ஆனால், இந்த தடவை முறையான அழைப்பு யாருக்கும் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காவல்துறை மேலதிகாரிகள் மட்டத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை" என்றனர்.
இது குறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம், "சேலத்துக்கு என்று தனி அமைச்சர் இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரிகிறதா என்று தெரியவில்லை. சமீபத்தில் மாநகராட்சி எல்லையில் அமைச்சர் ஆய்வு செய்ய சென்றபோது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர் வரவில்லை. இந்த விஷயம் அப்போதே பெருமளவு பேசுபொருளானது. அதனைத் தொடர்ந்து இன்று புதிதாக அமைச்சராகி, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செயல்படக்கூடிய திட்டத்தில் பங்கு பெறக்கூடிய அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா... அமைச்சர் ப்ரோட்டோ காலில் இது இல்லையா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் பேசினோம். ``புத்தகத் திருவிழா தொடர்பாக நடந்த மீட்டிங்கிலேயே காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை" என்றார்.
மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) உமாவிடம் ( சேலம் சரக டிஐஜி) பேசியபோது, ``ஆய்வு விஷயமாக வந்து விட்டேன். எனக்கு அழைப்பிதழ் வந்ததாக தெரியவில்லை. இது தொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்" என்றார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்காததால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்திலை தொடர்பு கொண்டு பேசினோம். ``புத்தக விழாவிற்கு அழைப்பிதழ் ஏதும் வந்ததாக எனக்கு தெரியவில்லை" என்றார்.