அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' - வெளியுறவுத்துறை கூறுவதென்ன?
அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில், அது குறித்து அமெரிக்கா தங்களுடன் எவ்வித தொடர்பும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை.
டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "நாங்கள் இதை தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை இடையிலான ஒரு சட்டப்பூர்வமான பொருளாக பார்க்கிறோம். இதுமாதிரி விஷயங்களுக்கான நடைமுறைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும் என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறையும் இது குறித்து அமெரிக்காவுடன் எவ்வித உரையாடலும் மேற்கொள்ளவில்லை என்பதையும் கூறியுள்ளார்.
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதித்துறை மற்றும் பத்திரங்கள் & பரிவர்த்தனை ஆணையம் சார்பில் அதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடத்த குற்றம்சாட்டப்பட்ட நபர் கைதுசெய்யப்படுவது வழக்கம். ஆனால் அதானி விஷயத்தில் எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அமெரிக்கா, அதானியின் கைது வாரன்ட்டை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்து அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் எனக் கூறப்பட்டது.
அதற்கு இரு நாடுகளின் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் அவரை ஒப்படைக்குமாறு அமெரிக்கா இந்திய அரசிடம் கேட்க வேண்டும். கோரிக்கையை ஆராய்ந்து தகுதி அடிப்படையில் இந்திய அரசு முடிவுகளை மேற்கொள்ளும்.
இந்த ஒப்படைப்புக்கு எதிராகவும் குற்றம்சாட்டப்பட்டவர் இந்திய நீதிமன்றத்தில் வாதாட முடியும். கைது நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது அல்லது அமெரிக்க காவல்துறையால் அதானி மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படலாம் என நீதிமன்றம் கருதினால் ஒப்படைப்புக்கு எதிராக தீர்ப்பளிக்கப்படும்.
பல நடைமுறைகளுக்குப் பிறகு அதானி விவகாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே நீண்ட நாட்களாகும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின்படி அதானி இந்திய அரசின் அங்கமாக செயல்படும் நபர்களுக்கு ரூ.2000 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளார். அவரிடம் லஞ்சம் பெற்ற நபர்கள் குறித்து விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இல்லை.
ஏற்கெனவே கௌதம் அதானி அமெரிக்க நீதிமன்றத்தில் தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறாவை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.