RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
Champions Trophy : 'பாகிஸ்தானே இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியா?' - ICC மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது?
பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பமாட்டோம் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது. 'நாங்கள் மட்டும் இந்தியாவுக்கு வர வேண்டும். இந்தியா பாகிஸ்தானுக்கு வராதா?' என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும் முறுக்கிக் கொண்டு நிற்கிறது. இந்நிலையில், ஐ.சி.சி அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளுடனும் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது.
நேற்று நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.சி.சியின் முக்கிய உறுப்பு நாடுகளும் அசோசியேட் நாடுகளும் கலந்துகொண்டிருக்கின்றன. சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதில் நீடிக்கும் குழப்பங்களைப் பற்றி ஐ.சி.சி சார்பில் பேசப்பட்டிருக்கிறது. அப்போது, பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் என இருதரப்பிலும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கின்றனர். அதாவது, பிசிசிஐ சார்பில் இந்தியா ஆடும் ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் என ஹைப்ரிட் மாடலை முன் வைத்திருக்கிறார்கள்.
அதுபோக, பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணிப்பதை இந்திய அரசு விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தரப்பிலும் உறுதியான நிலைப்பாடோடு இருந்திருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற வேண்டும் என்பதுதான் எங்கள் அரசின் விருப்பம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானை தவிர அத்தனை நாடுகளின் பிரதிநிதிகளுமே இந்தியா விரும்பும் ஹைப்ரிட் மாடலுக்கு ஒத்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் தாங்கள் மீண்டும் ஆலோசித்துவிட்டு வருவதாக சொல்லியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபியை ஒட்டுமொத்தமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றிவிடும் முடிவிலும் ஐ.சி.சி இருக்கிறதாம். அப்படி நடக்கும்பட்சத்தில் பாகிஸ்தான் இந்தத் தொடரை புறக்கணிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால், ஐ.சி.சி இது சார்ந்து இன்னும் எந்த முடிவையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சீக்கிரமே பிரச்சனையை பேசி தீர்த்து போட்டி அட்டவணையை அறிவிக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம்.