சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல், இண்டிகோ விமான சேவைகள் ரத்து
World Chess Championship : 'என்னோட நம்பிக்கை நியுமராலஜி இல்ல!' - டிராவுக்குப் பின் குகேஷ்!
சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் நான்காவது சுற்று ஆட்டம் நேற்று முடிந்திருக்கிறது. 42 வது நகர்த்தலில் டிங் லிரனும் குகேஷூம் ஆட்டத்தை டிரா செய்து கொள்வதாக சொல்லி கைக்குலுக்கி விடைபெற்றனர். இதனால் தொடர் இப்போது 2-2 என சமநிலையில் இருக்கிறது.
லிரன் வெள்ளைக் காய்களுடனும் குகேஷ் கருப்புக் காய்களுடனும் ஆடிய நான்காவது சுற்றில் டிங் லிரன் தனது குதிரையை f3-க்கு நகர்த்தித் தொடங்கினார். அதற்கு குகேஷ் தனது சிப்பாயை d5-க்கு நகர்த்தினார். இந்த ஆட்டத்தை ரெட்டி ஓப்பனிங் (Réti Opening) மூலம் கொண்டுச் சென்றனர்.
டிங் ஆட்டத்தின் 5-வது மூவில் தனது மந்திரியை a3-க்கு நகர்த்தி குகேஷை கொஞ்சம் யோசனைக்குத் தள்ளினார். ஆனால், குகேஷும் அனைத்தையும் சரியாக விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் இருவரும் அனைத்துக் காய்களையும் வெட்டிச் சமமாக ஆட்டத்தை எடுத்துச் சென்றனர். மேலும், இருவரும் சிறப்பாக விளையாடி 42-வது மூவில் ஆட்டத்தை டிரா செய்தனர்.
இதன் மூலம் இருவரும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். அடுத்த ஆட்டத்தில் (5-வது சுற்றில்) கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெள்ளை காய்களும், கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் கருப்புக் காய்களைக் கொண்டும் விளையாடுவார்கள். குகேஷ் வெள்ளை காய்களில் ஏதாவது புதிய நாவல்டிகள் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4-வது சுற்று ஆட்டம் முடிந்த பிறகு குகேஷிடம் கேரி கேஸ்பரோவ்வின் நியூமராலஜிக்கல் சார்ந்த நம்பிக்கைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, 'கேரி கேஸ்பரோவ் ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்ததால் 13 வது உலகசாம்பியனாகினார் என நம்பினார். இது 18 வது உலக சாம்பியன்ஷிப். உங்களுக்கும் 18 வயதாகிறது. உங்களுக்கும் அதேபோன்ற நம்பிக்கை எதுவும் உள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு குகேஷ், “எனது நம்பிக்கை அனைத்தும் நல்ல மூவ்களில் மட்டுமே என்ற பாப்பி ஃபிஸ்சரின் கூற்றை நான் நம்புகிறேன். நான் ஆட்டத்தில் நல்ல மூவ் ஆடவே முயற்சி செய்வேன்” என்றார் தீர்க்கமாக.