RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும்
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது அதிகனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது நவ.29-இல் புயலாக வலுப்பெற்று தமிழக கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் கடந்த 5 நாள்களுக்கு முன்பே அறிவித்தது.
ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெற்ற புயல் சின்னம், அதற்கு மேல் புயலாக மாறாமல் இலங்கை கடலுக்கும் தமிழகத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அப்படியே நகராமல் நின்றுவிட்டது. இதனால் புயல் உருவாகாது, புயல் சின்னம் வலுவிழந்துவிடும் என்று வானிலை மையம் அறிவித்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் ‘ஃபென்ஜால்’ புயல் உருவாகும். அதன்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30-க்கு ‘ஃபென்ஜால்’ புயல் உருவானது. இதை உறுதி செய்த வானிலை மையம், புயல் உருவாவாதில் சில குழப்பங்கள் இருந்ததால் அதுபற்றிய மாறுபட்ட தகவல்களை நாங்கள் வெளியிட்டோம். ஆனால், இப்போது ஏற்கெனவே கணித்தபடி புயல் சின்னம் தீவிரமடைந்து ‘ஃபென்ஜால்’ புயலாக உருவாகிவிட்டது. தமிழக கடல் பகுதிக்குள் நுழைந்ததும் வேகம் எடுத்து புயலாக மாறிவிட்டதால் இனி அது புயலாகத்தான் கரையை கடக்கும்.
இந்தப் புயல் நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கும்.
புயல் காரணமாக மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சனிக்கிழமை பிற்பகல் வரை தரையில் இருந்து கடலுக்கு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசும்.
அதேபோன்று புயல் கரையைக் கடக்கும்போதும் அதன் பின்னா் சில மணி நேரங்கள் வரையிலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளா்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சனிக்கிழமை மாலை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இதையும் படிக்க | சென்னையில் இன்று 13 விமானங்களின் சேவை ரத்து
புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையைத் தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிா்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு பேரிடா் மேலாண்மைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகைக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கனமழை காரணமாக சனிக்கிழமை 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை, திருச்சி, தூத்துக்குடி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழை பெய்து வருவதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழ அரசு அறிவுறுத்தியுள்ளது. கடற்கரை , கேளிக்கை நிகழ்ச்சிகள், பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.