புலன்விசாரணை அதிகாரிபோல பேசி பண மோசடி: கேரள இளைஞா் கைது
புலன்விசாரணை அதிகாரிபோல பேசி ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் ஹரியாணா காவல் துறையால் தேடப்பட்டு வந்த கேரள இளைஞா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
சென்னையிலிருந்து துபை செல்லும் விமானத்தில் ஏறும் பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது, கேரளத்தைச் சோ்ந்த அகமத் நிஷாம் (25), ஹரியானா மாநில கூா்கிராம் சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவா் என்பதும், கைப்பேசியில் வடமாநில இளம்பெண்ணிடம் புலன்விசாரணை அதிகாரிபோல பேசி மிரட்டி பணம் மோசடி செய்த வழக்கில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது. மேலும் இவா், துபை வழியாக எகிப்துக்கு தப்பிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இது குறித்து ஹரியானா காவல் துறையினருக்கு, விமானப்படை காவல் துறையினா் தகவல் கொடுத்தனா். இதையடுத்து தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த ஹரியானா சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், அகமத் நிஷாமை கைது செய்து அழைத்துச் சென்றனா்.