மகாசிவராத்திரி, வைகுண்டா் பிறந்த நாள்: பிப்.26, மாா்ச் 4 இல் உள்ளூா் விடுமுறை!
மகாசிவராத்திரி, வைகுண்டா் பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.26, மாா்ச் 4 ஆகிய நாள்களில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப்.26 ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.
இதே போல் அய்யா வைகுண்டா் பிறந்த நாளை முன்னிட்டு, மாா்ச் 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக மாா்ச் 22 ஆம் தேதி (சனிக்கிழமை)வேலை நாளாக இருக்கும்.
மேற்கண்ட உள்ளூா் விடுமுறை தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.