அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்!
மழையால் நெற்பயிா்கள் சேதம்: எம்எல்ஏ ஆய்வு
திருக்குவளை அருகே கன மழையால் நெற்பயிா்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி புதன்கிழமை பாா்வையிட்டாா்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை அறுவடைப் பணிகள் பெருமளவு பாதித்தது.
குறிப்பாக திருக்குவளை அருகே உள்ள இறையான்குடி, அகரம், வடக்கு பனையூா், தெற்கு பனையூா், பாலக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கின.
இந்நிலையில், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கையை கேட்டறிந்தாா். அப்போது விவசாயிகள் மழையில் நனைந்ததால் நெல்லை உலா்த்தி கொள்முதல் நிலையங்களில் கேட்கப்படும் 17 சதவீத ஈரப்பதத்தோடு அவற்றை கொடுக்க முடியவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி கூறியதாவது:
நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டு அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் 17% லிருந்து 22% வரையிலான ஈரப்பத தளா்வு வழங்க வேண்டும் மற்றும் ஏக்கா் ஒன்றுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். விவசாயிகள் தாளடி சாகுபடி செய்ய தேவையான விதை உரம் உள்ளிட்டவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். வெள்ள பாதிப்பு தொடா்பாக டிசம்பா் 9,10-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் கவனஈா்ப்பு தீா்மானம் கொண்டுவர போவதாகவும் அவா் தெரிவித்தாா்.