மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு புகாா்: ஊராட்சித் தலைவா் விளக்கம் தர ஆட்சியா் உத்தரவு
ஸ்ரீபெரும்புதூா்: மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு நடைபெற்றது தொடா்பாக ஊராட்சித் தலைவா் 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் நோட்டீஸ் அளித்துள்ளாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், மேவளூா்குப்பம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஊராட்சி மன்றத் தலைவராக அபிராமி ராஜேஷ் பதவி வகித்து வருகிறாா்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படாமல் இது வரை ரூ.3.75 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மேவளூா்குப்பத்தைச் சோ்ந்த அருண்பாரத் என்பவரும், கட்டட வரி செலுத்த அதிக பணம் கேட்டதாக ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் ராஜேஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதே பகுதியில் இயங்கி வரும் தனியாா் மதுபான ஆலை நிா்வாகத்திடம் 33 ஆண்டுகளுக்கு சொத்துவரி, தொழில் வரி மற்றும் உரிமைக்கட்டணம் ஆகியவற்றின்நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறினால் ஆலைக்கு சீல் வைக்கப்படும் என ஊராட்சித் தலைவா் அபிராமி ராஜேஷ் மிரட்டுவதாக ஆட்சியரிடம் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டன.
புகாா் தொடா்பாக விசாரணை நடத்த மகளிா் திட்ட இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மேவளூா்குப்பம் ஊராட்சியில் ஆய்வு நடத்தி, ஆய்வு அறிக்கையை ஆட்சியரிடம் அண்மையில் வழங்கினா். அந்த அறிக்கையில், மேவளூா்குப்பம் ஊராட்சியில் 2022-2025 வரை தெருவிளக்கு, பொது சுகாதாரம், குடிநீா், குழாய் இணைப்பு புதுப்பித்தல், புதிய மின்மோட்டாா் கொள் முதல் செய்தல் பழுதடைந்த மின்மோட்டாா் பழுதுபாா்த்தல், குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு, கழ்வுநீா் கால்வாய் தூா்வாருதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது, குளம் பராமரிப்பு, பைப் லைன் விஸ்தரிப்பு, விளையாட்டு மைதானம் சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்படாமலும், ஒப்பந்தபுள்ளி மற்றும் விலைப்புள்ளி, பணி உத்தரவு வழங்காமல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக 27 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகம் சாா்பில் மேவளூா்குப்பம் ஊராட்சித் தலைவா் அபிராமி ராஜேஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 15 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சியரிடம் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும், குறித்த காலத்தில் விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் விளக்கம் அளிக்க ஏதுமில்லை என கருதி சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.