`லக்கி பாஸ்கரும்’ பெண் பத்திரிகையாளரின் ஒரே கட்டுரையில் வீழ்ந்துபோன ஹர்ஷத் மேத்தா சாம்ராஜ்யமும்
ஹர்ஷத் மேத்தா, ஒரு காலத்தில் இந்திய பங்குச்சந்தையை உலுக்கிய ஊழல் பேர்வழி. 1991 - 92 இந்த ஒரு ஆண்டில் மட்டும் ஹர்ஷத் மேத்தாவால் இந்திய பங்குச்சந்தை அடைந்த இழப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும். ஹர்ஷத் மேத்தாவையும் அவரின் தில்லாலங்கடி வேலைகளையும் மையமாக வைத்து 'Scam 1992', 'Big Bull' மாதிரியான படங்களும் சீரிஸ்களும் நிறையவே வெளியாகியிருக்கின்றன. அத்தனை ஆயிரம் கோடி ஊழலை ஹர்ஷத் மேத்தா என்கிற நாயக கதாபாத்திரம் மட்டுமே முன் நின்று செய்ததைப் போலத்தான் இந்த படங்களின் காட்சிகள் இருக்கும். ஆனால், சமீபத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் ஹர்ஷத் மேத்தாவுக்கு பின்னால் என்னனென்ன மாதிரியான சமாச்சாரங்கள் நடந்தது. வங்கிகளின் விதிமுறை ஓட்டைகளும் பேராசை பிடித்த அதிகாரிகளும் ஹர்ஷத் மேத்தாவுக்கு எப்படி உதவியிருந்தனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தனர்.
பங்குச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை அதிகமாக வாங்கி, அந்த பங்குகளின் விலையை ஏற்றிவிட்டு, பங்குகளின் மதிப்பு உச்சத்தில் இருக்கும்போது அவற்றை விற்றுவிடுவதுதான் ஹர்ஷத் மேத்தாவின் பாணி.
இதை வெவ்வேறு விதங்களில் டிசைன் டிசைனாக செய்து கொண்டிருந்தார். ஒரு பிரபல நிறுவனத்தின் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்வார். அந்த நிறுவனத்தின் போக்கை தெரிந்துகொள்ள நிறுவனத்துக்குள்ளேயே தன்னுடைய சேவகன் ஒருவரை வைத்திருப்பார். சந்தையை கீழிறக்கும் வகையில் அந்த நிறுவனத்தின் போக்கு அமையப்போகிறது என சிறிய மெசேஜ் தன்னுடைய சேவகன் மூலம் கிடைத்தால் உடனே தன் கையில் இருக்கும் பங்குகளை விற்று பெரிய பணத்தை ஈட்டி தப்பித்துவிடுவார். போலி கம்பெனிகளின் பெயரில் அதிக பங்குகளை வாங்கி அதை விலையேற்றிவிட்டு அதையும் சூர லாபத்தில் விற்று விடுவார். பங்குகளின் விலை தாறுமாறாகச் உயர்கிறதே என நம்பி அந்த கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் தலையில் துண்டுதான்.
இப்படித்தான் பல ஆயிரம் கோடிகளை ஹர்ஷத் மேத்தா சம்பாதித்துக் கொண்டிருந்தார். சரி, பங்குகளை மொத்தமாக வாங்க அவருக்கு பெரிய தொகை தேவைப்பட்டிருக்குமே. அதை எப்படி திரட்டினார்? இந்த இடத்தில்தான் வங்கிகளின் ஓட்டை உடைசலான விதிமுறைகளும் அதிகாரிகளும் ஹர்ஷத் மேத்தாவுக்கு உதவினர். வங்கிகள் தங்களின் பண தேவைக்காக ரிசர்வ் பேங்கை மட்டுமே நாடியிராமல் வங்கிகளுக்குள்ளாகவே கூட பணப்பரிமாற்றம் செய்து கொள்வார்கள். பணம் தேவைப்படும் ஒரு வங்கி தங்களின் கடன் பத்திரங்களை இன்னொரு வங்கிக்கு வழங்கி அதற்கு ஈடாக பணத்தை பெற்றுக் கொள்வார்கள். இந்த பரிமாற்றத்தை வங்கிகள் தங்களுக்குள் நேரடியாக நிகழ்த்திக் கொள்ளாமல் இடைத்தரகர்கள் மூலமே செய்துகொள்ளும் வழக்கம் அப்போது இருந்தது. இந்த இடைத்தரகர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.
ஹர்ஷத் மேத்தாவும் அப்படிப்பட்ட இடைத்தரகர்தான். இந்த பரிமாற்றத்தில்தான் ஹர்ஷத் மேத்தா தன்னுடைய தில்லாலங்கடி வேலைகளையும் அரங்கேற்றினார். கடன் கொடுக்கும் வங்கியிடமிருந்து பெறும் பணத்தை கடன் வேண்டிய வங்கிக்கு அளிக்காமல் தன்னுடைய அக்கவுண்டுக்கு மாற்றிவிடுவார். அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பயன்படுத்திக்கொள்வார். லாபம் கிடைத்தவுடன் கடன் வேண்டி நின்ற அந்த வங்கிக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிடுவார்.
'Bank Receipt' என்கிற இன்னொரு முறையிலும் ஹர்ஷத் மேத்தா பல கோடிகளை வங்கிகளிலிருந்து முறைகேடாக அள்ளினார். அதாவது, ஒரு வங்கி தங்களுக்கு இத்தனை கோடி ரூபாய் கடனாக வேண்டும் என அதிகாரப்பூர்வமாக காகித வடிவில் 'Bank Receipt' ஆக கொடுக்கும். இந்த ரெசிப்ட்டை தரகர்கள் இன்னொரு வங்கியில் கொடுத்து பணத்தை வாங்கி ரெசிப்ட் வழங்கிய வங்கிக்கு கொடுக்க வேண்டும். ஹர்ஷத் மேத்தா அந்த 'Bank Receipt' களையே போலியாக அச்சடிக்க ஆரம்பித்தார். சில அதிகாரிகளின் துணையோடு பெரிய பெரிய வங்கிகளையே ஏமாற்றினார்.
ஹர்ஷத் மேத்தாவுக்காக வங்கிகளில் நிகழ்ந்த முறைகேடுகளை மையப்படுத்திதான் 'லக்கி பாஸ்கர்' படத்தை எடுத்திருக்கிறார்கள். வங்கி அதிகாரியான துல்கர் சல்மான் ஹர்ஷத் மேத்தா மூலம் தனக்கு வழங்கப்பட்ட 'Bank Receipt' கள் போலியானது என தெரிந்துகொள்ளும் காட்சிதான் படத்தின் திருப்புமுனையாக இருக்கும். பெரிய சிக்கலில் மாட்டியிருப்பதை உணரும் துல்கர் எப்படி ஸ்மார்ட்டாக அதிலிருந்து தப்பித்தார் என்பதுதான் மீதிக்கதை.
படத்தில் இந்த முறைகேடுகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது? ஹர்ஷத் மேத்தா எப்படி புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கினார் என்பது சொல்லப்பட்டிருக்காது. உண்மையில், ஹர்ஷத் மேத்தாவின் தகிடுதத்தங்கள் வெளியே வர காரணமாக இருந்தவர் ஒரு பெண் பத்திரிகையாளர். சுஜேதா தளால் என்கிற அவர் ஒரு வழக்கறிஞராக இருந்து 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் பிஸ்னஸ் ரிப்போர்ட்டராக 1990 இல் பணிக்கு சேர்ந்தவர். ஹர்ஷத் மேத்தாவின் ஆடம்பர வாழ்க்கையும் பங்குச்சந்தையில் அவரின் அதீத முதலீடுகளும் சுஜேதாவுக்கு சந்தேகத்தை கொடுத்தது.
புலனாய்வில் இறங்கினார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கணக்குகளில் கோளாறு இருப்பதும் அந்த கோளாறுகளோடு ஹர்ஷத் மேத்தாவுக்கு தொடர்பு இருப்பதையும் சுஜேதா கண்டடைகிறார். 1992 ஏப்ரல் 23 இல் ஹர்ஷத் மேத்தாவின் முறைகேடுகளை தோலுரிக்கும் வகையில் ஒரு கட்டுரை வெளியாகிறது. 'Big Bull' என போற்றப்பட்ட ஹர்ஷத் மேத்தா ஒரே நாளில் மோசடிக்காரன் என்பது வெட்ட வெளிச்சமானது. சுஜேதா பின்னாளில் பல்வேறு ஊழல்களையும் முறைகேடுகளையும் வெளிக்கொண்டு வந்தார். 2006 இல் அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
'வர்த்தகம் சார்ந்த ஊழல்களின் தாய் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழல்தான்!' என்கிறார் சுஜேதா. ஹர்ஷத் மேத்தாவின் குட்டு வெளிப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் எளியவர்களுக்கு பரிவு காட்டாத வங்கிகளும் அரசு இயந்திரங்களும் மோசடி பேர்வழிகளுக்கு மட்டும் வளைந்து கொடுக்கும் தன்மை மட்டும் மாறவில்லை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb