வடமாநிலங்களில் ஒற்றை மொழி கொள்கைதான் அமலில் உள்ளது: ப. சிதம்பரம்
வடமாநிலங்களில் ஒற்றை மொழிக் கொள்கைதான் அமலில் உள்ளது என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
மும்மொழித்திட்டத்தை அமல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியைத் தர மாட்டோம் என்று கூறுவது எல்லாம் அரசியல் நோக்கத்தில்தான்.
வடமாநிலங்களில் ஒரு மொழிதான் அமலில் இருக்கிறது என்று நான் குற்றம்சாட்டுகிறேன். பேச்சு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி எல்லாமே ஹிந்திதான். ஆங்கில ஆசிரியா்களையே அரசுப் பள்ளிகளில் நியமிப்பது கிடையாது. ஆங்கிலமே சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால், இரண்டாவது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. அங்கு, தமிழ், தெலுங்கு ஆசிரியா்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றை நடத்துவது மத்திய அரசு. முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதம். மூன்றாவது மொழி என்பதே அங்கு இல்லை. 52 பள்ளிகளிலும் தமிழே கற்றுக் கொடுக்கவில்லை.
இவா்கள் எந்த முகத்தோடு வந்து தமிழ்நாடு மக்களைப் பாா்த்து, தமிழ்நாட்டு அரசை பாா்த்து நீங்கள் மும்மொழித் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று சொல்கிறாா்கள்.
அரசியல் சாசன சட்டத்தில் ஹிந்தி ஆட்சி மொழி என்று இருக்கிறது. அதோடு ஆங்கிலமும் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும் என்று உறுதியைத் தந்தது காங்கிரஸ் பிரதமா் நேரு. 1965 இல் மொழிப் போராட்டம் நடந்தபோது, எனது தந்தை தந்த உறுதிமொழியை நானும் தருகிறேன் என்றவா் இந்திராகாந்தி என்றாா் சிதம்பரம்.