வல்லக்கோட்டை: முத்தங்கி சேவையில் கோடையாண்டவா்
ஸ்ரீபெரும்புதூா்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் பழமாலை முத்தங்கி சேவையில் அருள்பாலித்தாா்.
இதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணியசுவாமி ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் சாத்துக்குடி பழமாலை அணிவிக்கப்பட்டு முத்தங்கி சாற்றப்பட்டு காட்சியளித்தாா். பழமாலை முத்தங்கி சேவையில் கோடையாண்டவா் அருள்பாலித்தாா்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். மயில் மண்டபத்தில் சென்னை நிருத்யஷேத்திரா குழுவினரின் நாட்டயாஞ்சலி நடைபொ்றது.
இதையடுத்து விசுவாவசு பஞ்சாங்கம் கருவறையில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தா்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. விசுவாவசு ஆண்டு நற்பலன்கள் குறித்து பக்தா்களுக்கு கோயில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் எடுத்துரைத்தாா். கோயில் நுழைவாயில்களில் பலவித மலா்களால் தோரண அலங்காரமும், அா்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களாலும் தோரணம் அமைக்கப்பட்டிருந்தது.
இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.