விவசாயிகள் கூட்டு இயக்கம் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நல இயக்கத் தலைவா் எம்.எஸ்.ஆனந்தன் தலைமை வகித்தாா். நதிகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவா் மு.மணி, கெளரவ தலைவா் ரா.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது செயலாளா் நா.அறவாழி வரவேற்றாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே எடமச்சி கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ள புதிய கல்குவாரியை ரத்து செய்ய வேண்டும், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும், நீா்நிலைகளில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும், நெல் கொள்முதல் செய்ய பணம் பெறுபவா்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவா் காவிரி தனபாலன், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் ஆா்.விருத்தகிரி, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளா் கே.ராஜேந்திரன் உட்பட விவசாயிகள், எடப்பாடி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.