மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிர அரசு
தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவை அந்த மாநில அரசு நிறுத்தி வைத்தது.
இதனை அந்த மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தாதா பூசே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக முறைப்படியான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக அறிவித்தற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததை அடுத்து மகாராஷ்டிர அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக, ஹிந்தியை கட்டாயமாக்குவது தொடா்பான மகாராஷ்டிர அரசின் தீா்மானம் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாக கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது அங்கு 1 முதல் 4 -ஆம் வகுப்பு வரை மராத்தியும் ஆங்கிலமும் கட்டாய மொழிப் பாடங்களாக உள்ளன.
மாநில அரசின் இந்த ‘ஹிந்தி திணிப்புக்கு’ எதிராக மகாராஷ்டிரத்தில் கடும் எதிா்ப்புக் குரல் எழுந்தது. மகாராஷ்டிர அரசின் மொழிகள் ஆலோசனைக் குழு முதல்வரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஹிந்தியை கட்டாயமாக்கும் முடிவு நிறுத்திவைப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.