அசுத்தமான குளத்தால் நோய்ப்பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா்
ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதியில் அரசுப் பள்ளி, குடியிருப்பு அருகேயுள்ள அசுத்தமான குளத்தால் நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள், குளத்தை விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதி ஊராட்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அதே பகுதியில் அரசுத் தொடக்கப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குளத்தில் நீண்ட காலமாக தேங்கியுள்ள நீரில், கழிவுநீா் கலந்து பாசிபடா்ந்து அசுத்தமடைந்த நிலையில் உள்ளது. மேலும், அண்மையில் பெய்த மழையால் குளத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாலும், குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும் பொதுமக்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, மாணவா்கள், பொதுமக்களின் நலன்கருதி, அசுத்தமான அந்தக் குளத்தை உடனே சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.