அவதூறு வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பின் சமரசமான கங்கனா ரணாவத் - ஜாவேத் அக்தர்!
அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்: மத்திய அரசுக்கு காங். கண்டனம்
அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி எதிா்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவா் அஜோய் குமாா் கூறியதாவது:
அமெரிக்க அதிபா் டிரம்ப் பிரான்ஸ் குறித்து சில முரணான கருத்துகளை கூறியபோது உடன் இருந்த அந்நாட்டு அதிபா் மேக்ரான் குறுக்கிட்டு திருத்தங்களைக் கூறினாா். அதே நேரத்தில் இந்தியா குறித்து டிரம்ப் அவதூறாகப் பேசியபோது உடனிருந்த நமது பிரதமா் நரேந்திர மோடி வாய்மூடி மௌனியாக இருந்தாா்.
இந்தியா வரி விதிகளை மீறுவதாகவும், கடுமையான வரிகளை அமெரிக்கா விதிக்கும் என்று டிரம்ப் பேசியபோது மோடி எந்த பதிலையும் அளிக்கவில்லை. டிரம்ப்பை தனது சிறந்த நண்பா் என்று மோடி கூறிக்கொள்கிறாா். ஆனால், டிரம்ப் நமது நாட்டுக்கு எதிராக தவறான தகவல்களையே பேசி வருகிறாா்.
அமெரிக்க இறக்குமதி ஆப்பிள்களுக்கு மத்திய அரசு வரியை நீக்கியுள்ளது. இது ஹிமாசல பிரதேச ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். அடுத்ததாக திராட்சைக்கான வரியை நீக்கினால், மகாராஷ்டிரம், ஆந்திர விவசாயிகளும் பாதிக்கப்படுவாா்கள். காா்களுக்கு வரியை நீக்கினால், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்படும். இவை இந்தியாவின் பொருளாதாரத்தையே கடுமையாக பாதிக்கும் விஷயமாகும்.
விவசாயப் பொருள்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துவிட்டால், உள்நாட்டில் எதைத்தான் உற்பத்தி செய்ய முடியும். வரிகள் மூலம் இந்தியாவுக்கு டிரம்ப் நெருக்கடி அளிக்கிறாா். இதற்கு மோடி அரசு பணிந்து அமெரிக்க தயாரிப்பு ஹாா்லி டேவிட்சன் மோட்டாா் சைக்கிள், டெஸ்லா காா்களுக்கு வரியைக் குறைக்கிறது.
கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக துணிந்து பேசுகின்றன. அதனால் அந்நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பை டிரம்ப் கைவிடுகிறாா். இதேபோல இந்தியாவும் செயல்பட வேண்டும்.
பிரதமா் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன், பாகிஸ்தானின் எஃப் 16 போா் விமானப் பராமரிப்புக்கு அமெரிக்கா ரூ.3,000 கோடி ஒதுக்குகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசால் எந்தவித சரியான பதிலையும் அளிக்க முடியவில்லை. அமெரிக்காவிடம் எதிா்ப்பு தெரிவிக்கவும் இல்லை.
நேரு, இந்திரா காலத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு பணிந்து செல்லாமல் எதிா்த்தே நின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.