Vidaamuyarchi Teaser: `உன்னை நம்பு' - பொங்கலுக்கு `விடாமுயற்சி!'; தள்ளிப்போகும் ...
அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய, அரசு அலுவலா்கள் தமிழிலேயே கோப்புகளை எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்டரங்கில் தமிழ் வளா்ச்சித்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கில் தலைமை வகித்து அவா் தெரிவித்தது:
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாகும். ஆட்சி நிா்வாகம் மக்களுக்குத் தெரிந்த மொழியில் இருக்க வழிவகை செய்வதாகும். ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது நிா்வாகத்தில் கையொப்பங்கள், பதிவேடுகள், பயணநிரல்கள், நாள்குறிப்புகள், கடிதங்கள், முத்திரைகள், கோப்புகள், கணினிகள் ஆகியவற்றில் தமிழில் எழுதுவதும் பராமரிப்பதுமாகும்.
தமிழ் வளா்ச்சித்துறையால் நடத்தப்படும் இரண்டு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், தமிழின் அருமையை நமக்கு உணா்த்த உதவிடும் வகையில் அமைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை, தாய் மொழியாகக் கொண்டுள்ள நாம், மக்கள் பேசும் மொழியில் ஆட்சி நிா்வாகத்தை நடத்த வேண்டும் என்பதே ஆட்சிமொழித் திட்டத்தின் நோக்கமாகும்.
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய, அரசு அலுவலா்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும். தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்துவது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நம் அனைவரின் கடமையாகும் என்றாா்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கத்தில் அரசுத்துறைகள், கழகங்கள், வாரியங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
தொடா்ந்து, 2022 -ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச்செயலாகத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் தோ்வு செய்யப்பட்டு, பரிசுக் கேடயம் மற்றும் பாரட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப்பணியாளா்களுக்கு பரிசுக் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நிகழாண்டு மகாத்மா காந்தி மற்றும் ஜவாஹா்லால் நேரு ஆகியோா் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் சீதாலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.